வழிபாடு 
ஆன்மிகம்

வழிபாட்டின் முழுமையான பலன் கிடைக்க வேண்டுமா..? கோவில்களில் இந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது

கோவிலுக்குள் இருக்கும்போது உலகியல் விஷயங்களை பேசுவதையும் மொபைல் போன் பயன்படுத்துவதையும் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவதன்மூலம் இறைவனின் ஆசியுடன், கோவிலில் பரவியிருக்கும் நேர்மறை ஆற்றலானது மன அமைதியையும் புதிய உற்சாகத்தையும் வழங்கும். அதேசமயம், கோவிலில் அனுபவிக்கும் இந்த நேர்மறை ஆற்றலின் பலன்களை முழுமையாக வீட்டிற்குக் கொண்டு வருவதன்மூலம் வழிபட்டின் முழு பலனையும் பெற முடியும்.

நேர்மறை ஆற்றல்

கோவிலின் கருவறை என்பது மந்திர உச்சரிப்பு மற்றும் மூலிகைகளின் வாசம் நிறைந்த மாபெரும் சக்தி மையமாகும். அங்கு உருவாகும் தெய்வீக அதிர்வுகள், தரிசனம் செய்யும் பக்தர்களின் உடலிலும் மனதிலும் ஆழமாகப் பதிந்துவிடும். எனவே, தரிசனம் முடிந்தவுடன் நேராக வீட்டிற்குச் செல்வதே மிகவும் சிறந்த வழக்கமாகும். வழியில் வேறு எங்கும் செல்லாமல் இருப்பது இந்த ஆற்றலை அப்படியே பாதுகாக்க துணைபுரியும். நேராக வீட்டிற்கு செல்லும்போது கோவிலில் பெற்ற நேர்மறை ஆற்றல் முழுமையாக இல்லத்தில் பரவி நற்பலன்கள் கிடைக்க வழிவகுக்கும். இடையில் வேறு கடைகளுக்கோ அல்லது நண்பர்கள் வீட்டிற்கோ செல்வதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் கோவில் சென்று வீடு திரும்பியதும் உடனடியாக கை கால்களைக் கழுவக் கூடாது. சிறிது நேரம் கழித்து கை கால்களை கழுவலாம். இதன்மூலம் ஆலய தரிசனம் மூலம் பெற்ற தெய்வீக சக்தியை வீணாக்காமல் நமது குடும்பத்தினரோடு பகிர்ந்துகொள்ள முடியும்.

தரிசனம் செய்யும் முறை

கோவில்களில் பொதுவாக மூலவரை நேருக்கு நேராக நின்று தரிசனம் செய்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, சிவன் கோவிலில் மூலவருக்கும், நந்திக்கும் நேராக நடுவில் மறைத்து நின்று தரிசனம் செய்வது முற்றிலும் தவறான செயல். இதேபோல் பெருமாள் கோவில்களில் பகவானை தரிசனம் செய்தபடி எதிரே கருட பகவான் எழுந்தருளியிருப்பார். அங்கு கருடனை மறைத்தபடி நின்று பகவானை தரிசனம் செய்வதை தவிர்க்கவேண்டும். சன்னதியின் வலது அல்லது இடது புறமாக சற்று ஓரமாக நின்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டும்.

கொடிமரத்தின் அருகே அமரும்போது கால்களை நீட்டி அமர்வதைத் தவிர்க்க வேண்டும். கால்களை மடக்கிச் சம்மணமிட்டு அமர்வது மட்டுமே இறைவனுக்குச் செய்யும் முறையான மரியாதை. கோவிலுக்குள் இருக்கும்போது உலகியல் விஷயங்களைப் பற்றிப் பேசுவதையும் மொபைல் போன் பயன்படுத்துவதையும் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

பிரசாதத்தை வீணாக்கவேண்டாம்

சுவாமி தரிசனத்திற்குப் பிறகு வழங்கப்படும் விபூதி அல்லது குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு மீதமுள்ளதைத் தூண்களிலோ அல்லது சுவர்களிலோ பூசுவது தவறான செயல் ஆகும். இது கோவிலின் தூய்மையைக் கெடுப்பதோடு புனிதமான பிரசாதத்தை அவமதிப்பதாகும். மீதமுள்ள பிரசாதத்தை ஒரு சிறிய காகிதத்தில் மடித்து வீட்டிற்குக் கொண்டு செல்லலாம். சில கோவில்களில் இதற்காக ஆங்காங்கே காகிதங்கள் வைக்கப்பட்டிருப்பதை காணலாம். வீட்டுக்கு கொண்டு வந்த பிரசாதத்தை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதேபோல் கோவிலில் வழங்கப்படும் நைவேத்திய பிரசாதத்தையும் சிலர் முழுமையாக சாப்பிடாமல் ஆங்காங்கே போட்டுவிட்டு செல்வார்கள். இதையும் தவிர்க்க வேண்டும். சாப்பிட முடியாவிட்டால் குறைந்த அளவு பிரசாதத்தை கேட்டு வாங்கலாம்.

SCROLL FOR NEXT