சென்னை புதுப்பேட்டையில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை. 
ஆன்மிகம்

ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்.. கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து ஆலயங்களில் நடைபெறும் திருப்பலி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

கிறிஸ்தவர்களுக்கான தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு தவக்காலத்தின் நிறைவு வாரத்தின் வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் புனித வெள்ளியை முன்னிட்டு, தேவாலயங்களில் அமைதியான முறையில் ஆராதனைகள், சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இதுதவிர சிலுவைப்பாதை ஜெபவழிபாடும் நடைபெற்றது.

இதையடுத்து, இயேசு கிறிஸ்து 3ம் நாள் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று நள்ளிரவு முதலே ஆலயங்களில் ஈஸ்டர் கொண்டாட்டங்கள் தொடங்கின. கத்தோலிக்க ஆலயங்களில் நள்ளிரவு 12 மணிக்கும், சிஎஸ்ஐ ஆலயங்களில் இன்று அதிகாலை 4 மணிக்கும் ஈஸ்டர் திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது.

கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து ஆலயங்களில் நடைபெறும் திருப்பலி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். ஒருவருக்கொருவர் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

சென்னையில் சாந்தோம் பேராலயம், ஜெமினி கதீட்ரல் தேவாலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், பெரம்பூர் மாதா தேவாலயம், ராயப்பேட்டை வெஸ்லி தேவாலயம், புதுப்பேட்டை அந்தோணியார் ஆலயம்,

பாரிமுனை அந்தோணியார் தேவாலயம், சேலையூர் செயின்ட் மார்க் தேவாலயம், சேலையூர் சந்தோஷபுரம் செயின்ட் லூக் தேவாலயம், பெரவள்ளூர் உயிர்த்த கிறிஸ்து தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி, வழிபாடுகள் நடைபெற்றன. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.