சிறப்பு அலங்காரத்தில் கோபி சாரதா மாரியம்மன், அந்தியூர் பத்திரகாளி அம்மன் 
ஆன்மிகம்

ஈரோடு: அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள்

ஆடி வெள்ளி சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

கோபி,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் காலை 6.00 மணிக்கு அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

சாரதா மாரியம்மன்

மேலும் கோபி சாரதா மாரியம்மன் கோயில், கோபி மகா மாரியம்மன் கோயில், கோபி சீதாலட்சுமிபுரம் தண்டு மாரியம்மன் கோயில், கோபி இருக்கன்குடி மாரியம்மன் கோயில், கோபி பால மாரியம்மன் கோயில் மற்றும் கோபி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு ஆகியவை வழங்கப்பட்டன. மேலும் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவிலில் அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் வளையல் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து கூழ் வழங்கப்பட்டது.

அதேபோல தேர் வீதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், சந்திய பாளையம் மாரியம்மன் கோவில், காட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில், செம்புளிச்சாம்பாளையம் மாரியம்மன் கோவில், புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வருகை தந்து, அம்மனை தரிசனம் செய்தனர்.