திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த வாரம் நடக்கும் முக்கியமான உற்சவங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) திருமலையில் 'பாக் சவாரி' என்ற சிறப்பு வாய்ந்த உற்சவம் நடக்கிறது. அனந்தாழ்வாரின் பக்தியை சோதிப்பதற்காக பெருமாள் மற்றும் தாயார் நடத்திய தெய்வீக விளையாட்டை நினைவுகூரும் வகையில் இந்த உற்சவம் நடக்கிறது.
அனந்தாழ்வாரின் பூந்தோட்டத்துக்கு சேதம் ஏற்படுத்திய பத்மாவதி தாயாரை பிடித்த அனந்தாழ்வார், அவரிடம் இருந்து தப்பி செல்ல முயன்ற வெங்கடேஸ்வரர் எதிர்திசையில் ஓடியதாக ஐதீகம் கூறுகிறது. பின்னர் தனது தவறை உணர்ந்த அனந்தாழ்வார், பத்மாவதி தாயாரை விடுவித்தார். இந்தத் தெய்வீக நிகழ்வை நினைவுகூரும் வகையில் இன்று சாமி-தாயார் வழக்கத்துக்கு மாறாக எதிர்திசையில் ஊர்வலமாக அனந்தாழ்வாரின் புனித மலர் தோட்டத்தில் எழுந்தருளுவர். அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகள் முடிந்த பிறகு மீண்டும் கோவிலுக்கு திரும்புவர்.
நாளை (வெள்ளிக்கிழமை) அனந்தபத்ம நாப விரதத்தையொட்டி அதிகாலை திருமலை ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நான மகோற்சவம் நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை பவுர்ணமி கருட சேவை நடக்கிறது.