நாகை,
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வல்லாங்குளத்து மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு தீமிதி திருவிழா, தமிழ் புத்தாண்டு தினமான நேற்று (14.4.2026) நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து காப்பு கட்டிக் கொண்ட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அரசாணி குளத்திலிருந்து பால் காவடி, பால்குடம் சுமந்து வந்தனர். அந்த பாலை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
அதன்பின் தீ மிதிக்க காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். கோவிலை அடைந்ததும், கோவிலின் முன் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.