தெப்ப உற்சவம் 
ஆன்மிகம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தெப்ப உற்சவம் ஆரம்பம்... முதல் நாளில் ஸ்ரீகிருஷ்ணர் பவனி

தெப்பத்தில் எழுந்தருளிய பகவானை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பக்குளத்தின் நான்கு புறமும் திரண்டனர்.

திருப்பதி,

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் தெப்பத்திருவிழாவின் முதல் நாளில் ருக்மணி சத்யபாமா தேவியருடன் கிருஷ்ணர் எழுந்தருளி பவனி வந்தார்.

தெப்பத்திருவிழா

திருச்சானூரில் பிரசித்தி பெற்ற பத்மாவதி தாயார் கோவிலில் இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதனையொட்டி தெப்பத்தை அலங்கரிக்கும் பணி ஒருவாரமாக நடந்த தோடு ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்தன.

கோவில் தெப்பக்குளமான பத்ம சரோவரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில், முதல் நாளான நேற்று ஸ்ரீ கிருஷ்ண சுவாமி, ஸ்ரீ ருக்மிணி தேவி மற்றும் ஸ்ரீ சத்யபாமா தேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பக்குளத்தின் நான்கு புறமும் திரண்டனர். அவர்கள் தெப்பத்தில் பவனி வந்த பகவானை கண்குளிர கண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

அபிஷேகம்

முன்னதாக கிருஷ்ண சுவாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தெப்பத்தில் 3 முறை பவனி வந்த சுவாமி, பின்னர் 4 மாட வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இசை-கலாசார நிகழ்ச்சி

தெப்பத் திருவிழாவையொட்டி நடைபெற்ற பக்தி இசை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தன. நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி டாக்டர் ஏ.ஷரத், துணை நிர்வாக அதிகாரி ஹரிநாத், கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஸ்ரீவாரி சேவகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.