திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வசந்த உற்சவம் நான்கு நாட்கள் நடைபெறும். இதில், கஜேந்திர மோட்ச வைபவம் நான்காவது நாளில் நடைபெறும். அதாவது அகஸ்திய முனிவரால் கஜேந்திர யானையாக சாபம் பெற்ற மன்னன், பகவானின் சக்கராயுதம் மூலம் சாப விமோசனம் பெற்ற புராணத்தை விளக்கும் வகையில், இக்கோவிலில் கஜேந்திர மோட்ச விழாவாக நடத்தப்படுகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டின் வசந்த உற்சவம் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது. மறுநாள் சர்வ அலங்காரத்தில் சுவாமி ஆஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, கருவேல்குறிச்சி மணிமுத்தாறு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கருவேல்குறிச்சி மண்டகப்படி பூஜைகள், தீபாராதனை நடந்தது.
உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கஜேந்திர மோட்ச வைபவம் இன்று நடைபெற்றது. இதற்காக இன்று அதிகாலை 5:50 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் மண்டபத்திலிருந்து புறப்பாடாகி பக்தர்களுடன் ஊர்வலமாக மேளதாள வாத்தியங்களுடன் மணிமுத்தாற்றில் எழுந்தருளினார். அங்கு கோவில் யானை வந்தவுடன் 'கஜேந்திர மோட்ச பூஜைகளை பட்டாச்சாரியார்கள் நடத்தினர். மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
சூரிய உதயத்தின்போது, கஜேந்திர யானை ஆற்றுக்குள்ளிருந்து மூன்று முறை பிளிறியது. தொடர்ந்து பெருமாளின் சந்தனம், சடாரி யானைக்கு சார்த்தப்பட்டு மோட்சம் அளிக்கப்பட்டது. பின்னர், யானைக்கு பட்டாச்சாரியார்கள் மாலை அணிவித்து பழம் வழங்கினர். தொடர்ந்து யானை மீது ஆற்று நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் யானை பெருமாளை வணங்கி மூன்று முறை வலம் வந்து வழிபட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பகவானை தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சுவாமி புறப்பாடாகி கோவிலை அடைந்தார்.