திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகா கெங்கை சூடாமணி கிராமத்தில் கங்கை அம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில் கெங்கை அம்மன், விநாயகர், முருகர், துர்க்கை அம்மன், அம்மச்சார் அம்மன் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற நிலையில், மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதனையொட்டி கோவிலுக்கு முன்பு 108 கலசம் வைத்து யாக மண்டபம் கட்டி யாகசாலை பூஜை நடைபெற்றது. இந்த பூஜைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து புனித நீர் கலசத்துடன் கோவிலை மூன்று முறை வலம் வந்து கோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர்.
கும்பாபிஷேக விழாவில் இந்திர வனம், தத்தனூர், சேத்துப்பட்டு, பழம்பேட்டை, மருத்துவம்பாடி, கோதந்தவாடி, உலகம்பட்டு, அப்பேடு ஆகிய கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு நாடகம் நடந்தது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து கோவிலில் 48 நாள் மண்டல பூஜை தொடங்கியது.