கருட சேவை 
ஆன்மிகம்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கருட சேவை

ஆவணி மாதம் சுக்லபட்ச ஏகாதசியை முன்னிட்டு பவித்ரோற்சவ விழா கடந்த 25-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தென்திருப்பேரை,

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பவித்ரோற்சவ விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி தலங்களில் கடைசி தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆண்டுக்கு 4 திருவிழாக்கள் நடைபெறும். பங்குனி, சித்திரை மாதங்களில் ஆதிநாதருக்கும் மாசி, வைகாசி மாதங்களில் நம்மாழ்வாருக்கும் திருவிழா நடைபெறும். மேலும் பட்ஷிராஜருக்கு ஆடி சுவாதி விழா சிறப்பாக நடைபெறும்.

சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் ஆவணி மாதம் சுக்லபட்ச ஏகாதசியை முன்னிட்டு பவித்ரோற்சவ விழா கடந்த 25-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 நாட்கள் விழா நடைபெறுகிறது. தினமும் சிறப்பு பூஜைகள், வாகன சேவை நடைபெறுகிறது.

5-ம் நாளான நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு நித்தியல், 9 மணிக்கு ஹோமம் செய்து 11 மணிக்கு பூர்ணாஹுதி நடந்தது. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சேவிக்கப்பட்டு சாத்துமுறை கோஷ்டி, தீர்த்தம், சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

கருட சேவை

மாலையில் கருட சேவை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சாயரட்சை, 6 மணிக்கு உற்சவர் பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் அலங்கரிக்கப்பட்டு 7.45 மணிக்கு காட்சி அளித்தனர். பின்னர் மாடவீதி வலம் வந்தார்கள். விழாவில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், நிர்வாக அதிகாரி சதீஷ், ஆய்வாளர் நம்பி அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன், கள்ளப்பிரான் கோவிலில் தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பகவானை தரிசனம் செய்தனர்.