திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று இரவு கோலாகலமாக தங்கக்கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று மாலை 6.30 மணியில் இருந்து இரவு 11.30 மணிவரை சிகர நிகழ்ச்சியாக தங்க கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடந்தது. அதில் மலையப்பசாமி தங்க லட்சுமி காசு மாலை, வைர, வைடூரிய ஆபரணங்கள் அணிந்து எழுந்தருளினார்.
கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தபோது, கேலரிகளில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் 'ஏடுகுண்டல வாடா.. வெங்கடரமணா கோவிந்தா... கோவிந்தா...' என விண்ணதிர பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
வைணவ மரபில் கருட வாகன சேவைக்கு தனிச்சிறப்பு உண்டு. பரம பக்தரான கருடாழ்வார் மீது பெருமாள் எழுந்தருள்வது பக்தி மற்றும் சரணாகதியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. கருடனை தரிசிப்பது பாவங்களை நீக்கி ஞானம் மற்றும் வைராக்கியத்தைப் பெற வழி வகுக்கும் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன. கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமியை தரிசிப்பது தங்கள் பிறவி பயனை அடைந்ததற்கு ஒப்பானது என பக்தர்கள் நம்புகின்றனர்.
வாகன வீதிஉலா முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் கம்பீரமாக நடந்து ஊர்வலமாக வந்தன. கேரள செண்டை மேளம் உள்ளிட்ட மங்கள இசை வாசிக்கப்பட்டன. பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியவாறு சென்றனர். ஜீயர்கள் வேத மந்திரங்களை ஓதினர். பல்வேறு கலைஞர்கள் நாட்டிய, நடன நிகழ்ச்சிகளை நடத்தி பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தினர். நான்கு மாடவீதிகளில் அமர்ந்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர். வாகன வீதிஉலாவில் ஜீயர் சுவாமிகள், அதிகாரிகள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.