தமிழகத்தில் எத்தனையோ பழமையான கோவில்கள் இருந்தாலும், சென்னைக்கு மிக அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள "ஞாயிறு" புஷ்பரதேஸ்வரர் கோவில் பல அரிய பொக்கிஷங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இக்கோவில் சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. செங்குன்றத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இருக்கிறது.
பொதுவாக விநாயகர் சிலைகளில் அலங்காரமான கிரீடம் இருக்கும். ஆனால் இங்குள்ள பல்லவ விநாயகர் கிரீடம் இல்லாமல், மண்டை ஓடு போன்ற அமைப்பில் இயற்கையான யானை முகத்துடன் காட்சியளிக்கிறார்.
பல் தொடர்பான நோய்களால் அவதிப்படுபவர்கள், இங்குள்ள விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வியக்கத்தக்க பலன் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. பதவி மற்றும் பொருளின் மீதுள்ள அதீத மோகம் நீங்கி, மனத் தெளிவு பெற இந்த 'பல்லவ விநாயகரை' வழிபடுவது சிறப்பு.
இவ்வூரின் பெயரே 'ஞாயிறு' (சூரியன்). ஒருமுறை பிரம்மதேவர் யாகம் செய்தபோது, அதில் ஏற்பட்ட தவறால் சூரியனின் ஒளி மங்கியது. தன் ஒளியை மீண்டும் பெற சூரியன் இத்தலத்து ஈசனை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.
சூரிய பூஜை: ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் முதல் 7 நாட்களில், சூரிய ஒளி நேரடியாக கருவறை சிவலிங்கத்தின் மீதும், சொர்ணாம்பிகை அம்மன் மீதும் விழுகிறது.
அபிஷேகம் கிடையாது: சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழும் அந்த 7 நாட்களில், சூரியனே பூஜை செய்வதாக ஐதீகம் என்பதால், உச்சிக்காலத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
சூரியன் பார்வைக்கு அதிபதி. எனவே, பார்வை குறைபாடு உள்ளவர்கள், கண் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்கள் இங்குள்ள ஈசனுக்கும், சூரிய பகவானுக்கும் நெய் விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். இதனால் பார்வைத் திறன் மேம்படும் என்பது நம்பிக்கை.
சுந்தரமூர்த்தி நாயனாரின் பெரும் அன்பிற்குப் பாத்திரமான சங்கிலி நாச்சியார் அவதரித்த ஊர் இதுவே. இவர் இக்கோவிலில் உள்ள புஷ்பரதேஸ்வரரைத் தொழுது சிவப்பணியில் ஈடுபட்டு வந்தவர். இவருக்கு இக்கோவிலில் தனிச் சன்னதி உள்ளது.
இக்கோவிலில் நவக்கிரக சன்னதி கிடையாது. சூரிய பகவானே இங்கு பிரதானமாக இருப்பதால், அவரை வழிபட்டாலே ஒன்பது கிரகங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். பிரிந்த தம்பதியினர் மீண்டும் இணைய இங்கு கோதுமைப் பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.
இக்கோவில் காலை 7.30 மணி முதல் 11.00 வரையிலும்; மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் பக்தர்களின தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்திற்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படுகிறது.