ஸ்ரீ கிருஷ்ணர் (AI Image) 
ஆன்மிகம்

கோபாஷ்டமி... பகவான் கிருஷ்ணர் கோபாலனாக மாறிய திருநாள்

பக்தர்கள் கோவில்களுக்கு சென்று பகவான் கிருஷ்ணரை வழிபடுவதுடன், கோசாலைக்குச் சென்று சேவை செய்யலாம்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும், கோமாதாவையும் (பசுக்களை) போற்றி வழிபடும் நாள் கோபாஷ்டமி ஆகும். கோபாஷ்டமி என்பது, ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஐந்தாவது வயதை நிறைவு செய்து, கன்றுகளைப் பராமரிக்கும் நிலையிலிருந்து, பிருந்தாவனத்தில் உள்ள பசுக்களைப் பராமரிக்கும் நிலைக்கு உயர்ந்த மங்களகரமான நாள் ஆகும். அவர் தனது அன்பிற்குரிய சகோதரர் பலராமர் மற்றும் பசுக்களை பராமரிக்கும் சக நண்பர்களுடன் இணைந்து பசுக்களை மேய்ப்பதற்காக விரஜ பூமி காடுகளுக்கு சென்றார்; இதனால் அங்குள்ள மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராதாராணியின் திருவிளையாடல்

இதனுடன் தொடர்புடைய ஸ்ரீமதி ராதாராணியின் ஒரு அழகான திருவிளையாடலும் உள்ளது. பசுக்களுக்கு சேவை செய்யவும், ஸ்ரீ கிருஷ்ணருடன் இருக்கவும் விரும்பிய ராதாராணியும், அவருடைய தோழிகளும் கோபாலர்களைப் போல வேடமணிந்து, பசு சேவையில் (கோ-சேவை) ஈடுபட்டனர். இந்த இனிய திருவிளையாடல், கிருஷ்ணரின் மீது அவர்கள் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பையும், அவருக்குச் சேவை செய்வதற்கான ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறது.

இந்த நாளிலிருந்து, கிருஷ்ணர் மிகுந்த அன்புடன் பசுக்களைப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டார். இதன் மூலம் கோ-சேவைக்கு ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியை உருவாக்கினார். பரம்பொருளான இறைவனே நேரில் பசுக்களைப் போற்றிப் பாதுகாப்பதன் மூலம், பசு பாதுகாப்பு என்பது பக்தி உணர்வின் ஒரு அழகான வெளிப்பாடு என்பதை உணர்த்துகிறார்.

வழிபாடு

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும், கோமாதாவையும் போற்றி வழிபடும் கோபாஷ்டமி விழா, ஐப்பசி அல்லது கார்த்திகை மாதத்தில் வளர்பிறை அஷ்டமி திதியில் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் 2026-ஆம் ஆண்டிற்கான கோபாஷ்டமி இன்று (17-11-2026) கொண்டாடப்படுகிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, அஷ்டமி திதி இன்று அதிகாலை 4.19 மணிக்குத் தொடங்கி, நாளை அதிகாலை 6.04 மணி வரை நீடிக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று நள்ளிரவு 2.33 மணி வரை அஷ்டமி திதி உள்ளது.

இந்த நாள் கிருஷ்ண பகவானை வழிபடுவதற்கு உகந்த நாள் ஆகும். அருகிலுள்ள கோவில்களுக்கு சென்று பகவான் கிருஷ்ணரை வழிபடுவதுடன், கோசாலைக்குச் சென்று சேவை செய்யலாம். பசுக்களுக்குப் பசும்புல், வெல்லம், வாழைப்பழம் மற்றும் சுத்தமான நீர் வழங்கி, நெய் தீபம் ஏற்றி ஆரத்தி எடுத்து வலம் வந்து ஆசி பெறலாம். கோசாலைக்குச் செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே கிருஷ்ணர் சிலைக்கு அருகில் காமதேனு சிலையை வைத்து, கோபூஜை மந்திரம், காமதேனு மந்திரம் மற்றும் ஹரே கிருஷ்ண மகா மந்திரங்களை உச்சரித்து வழிபடலாம்.

இந்த புனிதமான தருணத்தில், கோபாலனின் திவ்ய லீலைகளை நினைவுகூர்வோம்.

SCROLL FOR NEXT