ஆன்மிகம்

நாளை பெரிய தேர் பவனி - வேளாங்கண்ணி பேராலயத்தில் குவியும் பக்தர்கள்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவணி நாளை இரவு நடைபெற உள்ளது.

நாகை,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 500 ஆண்டுகள் வரலாற்றுப் பெருமை கொண்ட புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

வங்கக்கடலோரம் அமைந்துள்ள ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிடத்தில் உப்பு கலந்த கடல் காற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தது. பேராலயத்தின் பழமை மாறாமல் பாதுகாக்கும் வகையில் சுண்ணாம்பு, சுட்ட செங்கல், கடுக்காய் தண்ணீர் உள்ளிட்ட பாரம்பரிய பொருட்கள் பயன்படுத்தப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவணி நாளை இரவு நடைபெற உள்ளது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் ஆரோக்கிய மாதா எழுந்தருள நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரினை தோல்களில் சுமந்து செல்ல உள்ளனர்.

தேர்பவனியை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர். விழாவை ஒட்டி 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாதா பிறந்த நாளை முன்னிட்டு நாளை மறுநாள் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT