திருச்சி,
முசிறி வட்டம் குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்து வழிபட்டனர்.
திருச்சி அருகே முசிறி வட்டம், காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில். குணசீல மஹரிஷியின் வேண்டுதலின்படி, பெருமாள் பிரசன்ன வெங்கடாஜலபதியாக எழுந்தருளிய தலம் என்பதால் இது குணசீலம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு எழுந்தருளி இருக்கும் பெருமாள், சங்கு சக்கரதாரியாக திருமார்பில் லட்சுமி வீற்றிருக்க, கையில் செங்கோல் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். திருப்பதிக்குச் சென்று தங்களது பிரார்த்தனைகளை செலுத்த முடியாதவர்கள் அந்த பிரார்த்தனைகளை இங்கு வந்து செலுத்துகின்றனர். அதனால், தென் திருப்பதி என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் குணசீல மகரிஷிக்கு காட்சி அளித்த புனித தினமான புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தை முக்கியமாக கொண்டு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில் சுவாமி பல்லக்கிலும், இரவு முறையே சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷவாகனம், யானை வாகனம், போன்ற வாகனங்களிலும் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7-ம்நாள் திருவிழாவான 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று 21-ந்தேதி பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி, காலை 5.30 மணிக்கு பெருமாள் உபயநாச்சியார்களுடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து 8.30 மணிக்கு மேள தாளங்கள் முழங்க, தேரின் பின்பக்கம் பொக்லைன் எந்திரம் மூலம் தேரை தள்ள, திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
பக்தர்கள் சிலர் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் புனித நீராடி, தேரின் பின்னால் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.
தேரோடும் வீதி வழியாக தேர் வலம் வந்து காலை 9.10 மணிக்கு நிலையை அடைந்தது. வாத்தலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்ட விழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்புகளின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.