திருவாரூர்,
குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வு, குருப்பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி நாளை (மே 26-ம்தேதி) நடைபெறுகிறது. இந்த ஆண்டு குரு பகவான் நாளை (மே 26-ம் தேதி) பகல் 11.08 மணிக்கு மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு முக்கிய குரு ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடுகளும், லட்சார்ச்சனை விழாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே குருபகவானுக்குரிய கோவிலான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நாளை குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. காலை 10 மணி அளவில் குரு பகவானுக்கு பால், தயிர், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. வரும் 28-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை 8 நாட்கள் லட்சார்ச்சனை விழா நடக்கிறது.
குருப்பெயர்ச்சி விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் ஆலங்குடிக்கு வருகை தருவார்கள் என்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
குருப்பெயர்ச்சி நாள் மட்டுமின்றி வியாழக்கிழமைகள் தோறும் ஏராளமான பக்தர்கள் ஆலங்குடியில் எழுந்தருளியிருக்கும் குரு பகவானை தரிசனம் செய்கிறார்கள். மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகா குருவாரமாகக் கொண்டாடப்படுகிறது.