ஆன்மிகம்

கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார் குரு பகவான்... சுப பலன்களை பெறப்போகும் ராசிகள்

குரு பகவான் உச்சம் பெறும் வேளையில் ஆன்மிகம் தழைக்கும். சுபநிகழ்ச்சிகள், குடமுழுக்கு விழாக்கள், ஆலயத் திருப்பணிகள் அதிகம் நடைபெறும்.

நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு பகவான், ஒரு ராசியில் 12 மாதம் முதல் 13 மாதங்கள் வரை சஞ்சரிப்பார். அவ்வகையில் இப்போது மிதுன ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான், அந்த ராசியில் இருந்து வெளியேறி கடக ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 26.5.2026 அன்று இந்த குருப்பெயர்ச்சி நடக்க இருக்கிறது. அதாவது, பராபவ வருடம் வைகாசி மாதம் 12-ந் தேதி செவ்வாய்க்கிழமை பகல் 11.08 மணியளவில் வாக்கிய கணித ரீதியாக புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். அங்கு உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார்.

உச்ச குருவின் பார்வையானது விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளில் பதிவாகின்றது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப, தன் பார்வை பலத்தால் நற்பலன்களை வழங்குவார். தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. வருமானம் உயரும். வளர்ச்சி கூடும்.

குரு பகவான் உச்சம் பெறும் இவ்வேளையில் நாட்டிலும், வீட்டிலும் நல்லது நடக்கும். ஆன்மிகம் தழைக்கும். சுபநிகழ்ச்சிகள், குடமுழுக்கு விழாக்கள், ஆலயத் திருப்பணிகள் அதிகம் நடைபெறும். 26.5.2026 அன்று பெயர்ச்சியாகி கடகத்தில் உச்சம் பெறும் குரு பகவான், 20.10.2026 அன்று மீண்டும் சிம்ம ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார். பிறகு 13.2.2027 முதல் மீண்டும் கடக ராசிக்கு வந்து தன் பயணத்தை தொடர்கிறார். அதோடு 13.11.2026 ராகு-கேதுக்களின் பெயர்ச்சி நிகழ விருக்கிறது. மகர ராகுவும், கடக கேதுவும் மாற்றமும், ஏற்றமும் கொடுக்கப் போகிறார்கள். இடையில் குரு வக்ரமும் பெறுகிறார்.

கடக ராசிக்கு ஜென்ம குருவாக வரும் குரு பகவான், அர்த்தாஷ்டம் குருவாக மேஷத்திற்கும், அஷ்டமத்து குருவாக தனுசுவிற்கும், விரய குருவாக சிம்மத்திற்கும், ரோக குருவாக கும்பத்திற்கும் வருவதால் மேற்கண்ட ராசிகளில்

பிறந்தவர்கள், தங்கள் சுய ஜாதக அடிப்படையில் நடைபெறும் திசாபுத்தி பலம் அறிந்து அதற்குரிய ஆலயங்களை தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும். குருப்பெயர்ச்சி அன்று குருவின்

சன்னிதியில் நின்று குருகவசம் பாடி வழிபடுவதோடு சான்றோர்கள், பெரியவர்களின் ஆசிகளையும் பெற்றால் எல்லா நாட்களும் இனிய நாட்களாக மாறும்.

பொதுப் பலன்கள்

இந்த குருப் பெயர்ச்சியின் விளைவாக நல்ல நிகழ்வுகள் பலவும் நாட்டில் நடைபெறும். உச்சம் பெற்ற குரு என்பதால் மக்கள் அச்சமில்லாமல் வாழ அரசாங்கம் வழிவகுத்துக் கொடுக்கும். தங்கம், வெள்ளி விலை உயரும். பெட்ரோல், டீசல், எரிவாயுகளின் விலை ஏற்றமும், இறக்கமுமாகவே இருக்கும். விளையாட்டுத்துறை, விஞ்ஞானம், மருத்துவம், கலைத்துறை, ஜோதிடத்துறை, ஆன்மிகத்துறை, பத்திரிகை, ஊடகங்கள், கணினித் துறைகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். மழைவளம் சிறப்பாக அமையும். செவ்வாய், சனி சேர்க்கை காலத்திலும், பார்வைக் காலத்திலும் இயற்கை சீற்றங்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்புகள் உண்டு.

சிம்மத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அரசியல் களத்தில் சிறு சிறு பிரச்சினைகள், உட்கட்சிப் பூசல்கள் ஏற்பட்டு கலக்கத்தை உருவாக்கலாம். அரசியல் களத்தில் உள்ள பெண்களுக்கு பொறுப்புகளும், முக்கியத்துவமும் கிடைக்கும். இளம் கலைஞர்கள் பலர் உருவாகி புகழ் பெறுவர்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரு பெயர்ச்சி ஜூன் மாதம் 2ம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 2-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.