சங்கரநாராயணர் 
ஆன்மிகம்

அரியும் சிவனும் ஒன்று... அம்பிகைக்கு காட்சி கொடுத்த சங்கரநாராயணர்

அரியும், சிவனும் ஒன்றாக இணைந்து சங்கர நாராயணராக காட்சி தந்த நன்னாள் 'ஆடித் தபசு' திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களில் ஆடித் தபசு விழாவும் ஒன்று. இது, அம்பிகையை வழிபடுவதற்கு உரிய நாள் மட்டுமின்றி, சைவ-வைணவ ஒற்றுமையை உணர்த்தும் நாளாகவும் உள்ளது.

முன்னொரு காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரண்டு நாக அரசர்கள் வாழ்ந்து வந்தனர். அதில் சங்கன் என்பவர் சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். பதுமன், மகாவிஷ்ணுவின் மீது அதிக பக்தி கொண்டவர். ஒரு சமயம் இருவருக்கும் 'சிவன் பெரியவரா அல்லது மகாவிஷ்ணு பெரியவரா’ என்ற வாதம் எழுந்தது. இருவரும் மாறிமாறி 'நான் வணங்கும் இறைவன்தான் மேலானவர்' என்று வாக்குவாதம் செய்தனர்.

இறுதியில், இதற்கு சரியான பதில் வேண்டி இருவரும் பார்வதி தேவியிடம் முறையிட்டனர். பார்வதி தேவியோ, ‘சிவன் - விஷ்ணு இருவரும் ஒன்றுதான்’ என்றார். ஆனால், நாக அரசர்கள் இருவரும் அதை ஏற்க மறுத்தனர். இதையடுத்து பார்வதி தேவி, “உரிய காலம் வரும்போது அறிந்து கொள்வீர்கள்” என்று கூறிவிட்டு சென்றார்.

புன்னை வனத்தில் தவமிருந்த அன்னை

பின்னர், நடந்தவற்றை சிவபெருமானிடம் கூறிய பார்வதி தேவி, “நாக அரசர்கள் மட்டுமின்றி உலக உயிர்கள் அனைத்திற்கும் சிவனும், அரியும் ஒன்றுதான் என்பதை உணர்த்த வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

அதற்கு சிவ பெருமான், “அது அவ்வளவு எளிதானதல்ல. இதற்காக கடுமையான தவம் இருக்க வேண்டும்” என்றார். உலக நன்மைக்காக, தான் தவம் இருப்பதாக பார்வதி தேவி கூறினார்.

அவருக்கு ஆசி வழங்கிய சிவபெருமான், “பொதிகை மலை பகுதியில் புன்னை மரங்கள் நிறைந்த வனத்தில் முனிவர்கள் பலர் என்னை நோக்கி தவம் இயற்றி கொண்டிருப்பார்கள். அவர்களுடன் நீயும் தவம் இயற்று. உரிய காலத்தில் நாங்கள் உனக்கு காட்சி அளிப்போம்" என்றார்.

அதன்படி, அன்னை தவக் கோலத்தில் பூலோகம் புறப்பட்டார். அப்போது தேவலோக பெண்கள் அனைவரும் பசு வடிவில் அன்னையுடன் புன்னை மர வனத்திற்கு வந்தனர். பார்வதி தேவி, ஊசி முனையின் மீது ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் புரிந்தார்.

சங்கரநாராயணர்

பார்வதியின் தவத்தில் மகிழ்ந்து சிவனும், மகாவிஷ்ணுவும் ஒரே ரூபமாக காட்சி தந்தனர். சிவன் ஒரு பாதியாகவும், மகாவிஷ்ணு மறு பாதியாகவும் தோன்றினர். இவ்வாறு அரியும், சிவனும் ஒன்றாக இணைந்து சங்கர நாராயணராக (சங்கரன் - சிவன், நாராயணன் - மகாவிஷ்ணு) காட்சி தந்த நன்னாள்தான் 'ஆடித் தபசு' திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

'கோ' அல்லது 'ஆ' என்றால் பசு என்றும், 'மதி' என்றால் 'நிலா' என்றும் பொருள். பசுக்கூட்டத்துடன், மதி போன்ற அழகான முகத்துடன் தவம் இயற்றியதால் அன்னை 'கோமதி அம்மன்' என்றும், 'ஆவுடை நாயகி' என்றும் அழைக்கப்படுகிறார். அன்னை தவம் இயற்றிய இடம் தான், தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் தலம்.

கோமதியம்மனின் தவக்கோல தரிசனம்

ஆடித் தபசு உருவாக காரணமாக இருந்த தலம் என்பதால் சங்கரன்கோவில் திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஆடித் தபசு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபடுவார்கள். சங்கரன்கோவில் சிவ தலமாக இருந்தாலும், இங்கு கோமதியம்மனே பிரதானம். ஆடித் தபசு அன்று, தவக்கோலத்தில் இருக்கும் கோமதியம்மனையும், சங்கரநாராயணரையும் தரிசித்தால் அனைத்துவிதமான நலன்களும் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

இந்த ஆண்டு ஆடித் தபசு திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் சங்கரன்கோவில் சென்று வழிபடுவது மிகவும் விசேஷம். முடியாதவர்கள் அருகில் உள்ள அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடலாம். இன்றைய தினம் அம்பிகையை வழிபட்டால் விரைவில் திருமண பாக்கியம் கைகூடும், வேண்டிய வரங்கள் கிடைக்கும், கணவன் - மனைவி ஒற்றுமை பலப்படும், மங்கலகரமான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.