லட்சுமி குபேர பூஜை (AI Image) 
ஆன்மிகம்

தீபாவளி நாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது எப்படி?

தீபாவளி நாள் இரவில் செய்யப்படும் லட்சுமி குபேர பூஜையானது எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, வறுமையைப் போக்கி குடும்பத்தின் நிதி நெருக்கடிகள் மற்றும் கடன் சுமைகளைக் குறைத்து நேர்மறை ஆற்றலை நிரப்பும்.

தமிழகத்தில் தீபாவளி என்பது நரக சதுர்த்தசி என்று கொண்டாடப்படுகிறது. அதாவது, நரகாசுரன் என்ற அசுரனை பகவான் கிருஷ்ணரும் சத்தியபாமாவும் வதம் செய்த நாள் என்பதால், நரக சதுர்த்தசியாக கொண்டாடப்படுகிறது. பிற மாநிலங்களில் இந்த பண்டிகை மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது.

எண்ணெய் ஸ்நானம்

தீபாவளி தினத்தில் எண்ணெய் ஸ்நானம் செய்வது அதுவும் வெந்நீரில் செய்வது சிறப்பு. அன்றைய தினம் எண்ணையில் லட்சுமியும் தண்ணீரில் கங்கையும் இருப்பதாக ஐதீகம்.

தீபாவளி கொண்டாடும் தினமான சதுர்த்தசிக்கு அடுத்த நாள் அமாவாசை அன்று வட இந்தியாவில் 'சத் பூஜா' என்று பெண்கள் கொண்டாடுகிறார்கள். இந்நாளில் இல்லத்தில் இருக்கும் பெண்கள் ஆண்களின் நலனுக்காக பூஜை செய்வது வழக்கம். தமிழகத்திலும், ஆந்திராவிலும் அமாவாசை தினத்தில் 'கேதார கௌரி விரதம்' கடைபிடிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி (8.11.2026) தீபாவளி கொண்டாடப்படுகிறது.

லட்சுமி- குபேர வழிபாடு

தீபாவளியையொட்டி செய்யும் வழிபாடுகளில் லட்சுமி- குபேர வழிபாடு முக்கியமானது. பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம். குடும்பத்தின் செல்வச் செழிப்புக்காக செய்யப்படும் இந்த பூஜை, செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீ மகா லட்சுமியையும், செல்வத்தைக் காக்கும் குபேரனையும் ஒருசேர வழிபடும் ஒரு பூஜையாகும். இந்த பூஜையானது ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் வியாழக்கிழமை தினங்களில் செய்யலாம். தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை அன்று இந்த பூஜை செய்வது சிறப்பு வாய்ந்தது.

தீபாவளித் திருநாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது செல்வம் பெருகவும், பண வரவு சீராக இருக்கவும், கடன் தொல்லை நீங்கி குடும்பத்தில் நிலையான மகிழ்ச்சி மற்றும் பொருளாதார பாதுகாப்பு நிலவவும் செய்யப்படுகிறது. மகாலட்சுமியையும், குபேரனையும் ஒன்றாக வழிபடுவதால் வாழ்வில் நிலையான பொருளாதாரமும், நிம்மதியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

செல்வம் நிலைக்கும்

செல்வத்திற்கும், நல்வாழ்விற்கும், அதிர்ஷ்டத்திற்கும் அதிபதியான மகாலட்சுமி தீபாவளி அன்று பாற்கடலில் இருந்து தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. குபேரனோ பிரம்மாவிடம் வரம் பெற்று, அண்ட சராசரத்தின் செல்வங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் செல்வக் காவலர். லட்சுமி குபேர பூஜை செய்வதன்மூலம், லட்சுமி அருளால் கிடைக்கும் செல்வமும், குபேரனின் அருளால் அது நிலைத்து நின்று, வீண் விரயங்கள் இல்லாமல் பெருகும் என்பதும் நம்பிக்கை.

தீபாவளி அமாவாசை அன்று லட்சுமி தேவி பூலோகத்திற்கு வந்து தூய்மையாகவும், வெளிச்சமாகவும் இருக்கும் வீடுகளில் நுழைவதாக ஐதீகம். எனவே இந்நாளில் இரவில் செய்யப்படும் லஷ்மி குபேர பூஜையானது எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, வறுமையைப் போக்கி குடும்பத்தின் நிதி நெருக்கடிகள் மற்றும் கடன் சுமைகளைக் குறைத்து நேர்மறை ஆற்றலை நிரப்பும்.

தொழில் செய்பவர்கள், வியாபாரிகள் மற்றும் குடும்பத்தினர் புதிய கணக்குத் துவங்கி ஆண்டின் வளமான தொடக்கத்திற்காக இந்த பூஜையை செய்கின்றனர். குபேரனை வழிபடுவதன் மூலம் தொழிலில் நஷ்டங்கள் நீங்கி, புதிய முதலீடுகளும் லாபமும் பெருகும் என்பது நம்பிக்கை. மகாலட்சுமியின் அருளோடு குபேரனின் அருளும் சேரும்போது தரித்திரம் நீங்கி, உரிய வழியில் செல்வம் புழங்க வழி பிறக்கும்.

லட்சுமி குபேர பூஜை செய்வது எப்படி?

தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா நீராடல் செய்த பிறகு, பூஜை அறை அல்லது பூஜை செய்யும் இடத்தை அலங்கரிக்கவேண்டும். அதில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.

சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழை இலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும். பிறகு, சொம்பின் வாய் பகுதியில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும்.

மகாலட்சுமி பாராயணம்

இந்த கலசத்துக்கு முன்பாக வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து வைக்க வேண்டும். பின்னர் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழை இலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும். அவருக்குக் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும்.

அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம். விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும்.

அர்ச்சனை

தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்துதி தெரியாதவர்கள், குபேராய நமஹ... தனபதியே நமஹ.. என்று துதித்து, உதிரிப் பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். 108 நாணயங்கள் கொண்டு பூஜித்தும் குபேரனுக்கு அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் ஆகியவற்றை லட்சுமி, குபேரருக்கு நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும்.

தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு. தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால், அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைத்து இல்லத்தில் செல்வம் பெருகும், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

SCROLL FOR NEXT