திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இதில் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், சுப முகூர்த்த தினம் என்பதாலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டு உள்ள காத்திருப்பு கூடத்தின் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்களின் வரிசையானது அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள காத்திருப்பு கூடத்தில் உள்ள 8 அறைகளையும் தாண்டி வட ஒத்தவாடை தெருவில் நீண்டு காணப்பட்டது. அதேபோல் ராஜகோபுரம் வழியாக சென்ற பக்தர்களின் வரிசையும் வட ஒத்தவாடை தெருவில் நீண்டு காணப்பட்டது.
3 மணி நேரத்திற்கு மேல்
நேற்று பகலில் வழக்கம் போது வெயில் சுட்டெரித்தது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வரிசையில் நின்ற பக்தர்களுக்கு கோவில் நிர் வாகம் சார்பில் நீர், மோர் வழங்கப்பட்டது.
கோவிலில் பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர். மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றபடி காணப்பட்டனர். இதனால் கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்களிலும், இடுக்கு பிள்ளையார் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.