தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அன்னுக்குடி கிராமத்தில் ஸ்ரீ அபிராமி அம்பிகா சமேத ஸ்ரீ ஜகந்நாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டு அதற்கான திருப்பணி வேலைகள் நடைபெற்றன.
திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 4 கால யாகசாலை பூஜை நடைபெற்றதையடுத்து பூர்ணாஹுதி, தீபாராதனையைத் தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. மேள தாள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
இந்த கலசங்கள் ராஜகோபுர உச்சியை அடைந்ததும், கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் ஸ்ரீ அபிராமி அம்பிகா சமேத ஸ்ரீ ஜகன்னாத பரமேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.