தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த வரதராஜ பெருமாள். 
ஆன்மிகம்

வைகாசி பிரம்மோற்சவம் 3-ம் நாள் விழா: தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் வீதியுலா

தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் வீதியுலா வந்தபோது பக்தாக்ள் “கோவிந்தா... கோவிந்தா...” என முழக்கமிட்டபடி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம்,

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான அத்தி வரதர் கோவில் என அறியப்படும் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உலகப் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

வைகாசி பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான நேற்று காலை முக்கிய உற்சவமான கருட சேவை உற்சவம் நடைபெற்றது.

கருட சேவை உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, இளம் ராமர் நீல நிற பட்டு உடுத்தி, மல்லிகைப்பூ, மகிழம்பூ, மனோரஞ்சிதம் பூ, செண்பகப்பூ உள்ளிட்ட மலர் மாலைகள், வைர வைடூரிய திருவாபரணங்கள் அணிவித்து அதிகாலை 3 மணி அளவில் பச்சை பட்டு உடுத்திய தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர்.

தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த வரதராஜ பெருமாள்.

தங்க கருட வாகனத்தில் வீதிஉலா

பின்னர் மேளதாள, பேண்டு வாத்தியங்கள் முழங்க, திவ்யபிரபந்த கோஷ்டியினர், வேதப்பாராயண கோஷ்டியினர், மற்றும் பஜனை கோஷ்டியினர் பாடிவர, தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், அதிகாலை 5 மணி அளவில் ஆழ்வார் பிரகாரத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.

பின்னர், காஞ்சீபுரம் நகரின் முக்கிய வீதிகளான சன்னதி வீதி, செட்டி தெரு, திருக்கச்சி நம்பி தெரு, விளக்கு ஒளி பெருமாள் கோவில் தெரு வழியாக வீதி உலா வந்து குழுமியிருந்த பக்தர்களுக்கு காட்சி தந்தார். அப்போது கற்பூர ஆரத்தி காட்டி ‘கோவிந்தா, கோவிந்தா, வரதா, வரதா’ என பக்தி கோஷமிட்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் திரண்டனர்

கோடை விடுமுறை என்பதால் வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவத்தை காண காஞ்சீபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.