செங்கல்பட்டு,
சிங்கை சிங்காரவேலன் கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள், கோவிலை 108 முறை வலம் வந்து தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் பழமை வாய்ந்த சிங்கை சிங்கார வேலன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 10 ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சஷ்டி விழாவை முன்னிட்டு சிங்கப்பெருமாள் கோவில், ஆப்பூர், கொளத்தூர், கொண்டமங்கலம், செட்டி புண்ணியம், வடகால், அஞ்சூர், தென்மேல்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் கந்த சஷ்டி தினமான இன்று காலை முதலே திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து 108 முறை கோவிலை சுற்றி வந்து, வேண்டுதலை நிறைவேற்றினர். மாலை அணிந்த பக்தர்கள் மட்டுமல்லாமல் மாலை அணியாமல் விரதம் இருந்து பக்தர்களும் கோவிலை சுற்றி வேண்டுதலை நிறைவேற்றினார்கள். இவ்வாறு 108 முறை வலம் வரும் பக்தர்கள் சுற்று எண்ணிக்கைக்காக வெள்ளை கொண்டைக்கடலை, கருப்பு கொண்டைக்கடலை, காராமணி, மொச்சை, வேர்கடலை, பட்டாணி, பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, சாக்லேட் உள்ளிட்ட பொருட்களை ஆலயத்தில் வைக்கப்பட்டு இருந்த அகண்ட பாத்திரத்தில் போட்டபடி வலம் வந்தனர்.
கந்த சஷ்டியை முன்னிட்டு சிங்காரவேலனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.