பெரியபாளையம்,
சிறுவாபுரி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல்களான வீடு, மனை, வேலை வாய்ப்பு, திருமணம், பிள்ளைப்பேறு உள்ளிட்டவை நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இக்கோவிலில் மகா கந்த சஷ்டியை முன்னிட்டு நேற்று மாலை உற்சவ நிகழ்ச்சிகள் தொடங்கின. ஆனந்தன் குருக்கள் தலைமையில் விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை விநாயகர், வீரபாகு, வேல் ஆகியவற்றிற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதன் பின்னர், கொடிமரத்தில் கந்த சஷ்டி விழாவிற்கான கொடியேற்றப்பட்டது. சுவாமி பிரகார புறப்பாடும் நடைபெற்றது. மாலை யாகசாலை பூஜையுடன் ரக்ஷா பந்தனம், சுவாமி பிரகார புறப்பாடு நடைபெறுகிறது.
தொடர்ந்து யாகசாலை பூஜைகள், சுவாமி பிரகார புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் மாலை 4 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சியும், சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சியும், சுவாமி உள் பிரகார புறப்பாடும் நடைபெறுகிறது.
மறுநாள் திங்கட்கிழமை காலையில் அபிஷேகம், மாலையில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இரவு மங்கள வாத்தியம் முழங்க வாணவேடிக்கையுடன் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 6 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் முருகப் பெருமான் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். பல்லக்கு, ஆட்டுக்கிடா, உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் எழுந்தருளி மேளதாளம் முழங்க வாண வேடிக்கைகளுடன் உலா வருவார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதனைக் காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதேபோல் மறுநாள் திங்கட்கிழமை மாலை நடைபெற உள்ள தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சியிலும் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். கந்த சஷ்டி விழாவையொட்டி தினமும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது.