தேரோட்டம் 
ஆன்மிகம்

கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் ஆனித் திருவிழா... கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

தேர் இழுக்கும் பக்தர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை(பாஸ்) வழங்கப்பட்டது.

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் ஆனிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

கண்டதேவி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ளது கண்டதேவி கிராமம். இந்த கிராமத்தில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சொா்ணமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண கால புராண தொடர்புடைய இக்கோவிலிலில் ஆண்டுதோறும் ஆனி மாத பெருந்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

அவ்வகையில் இந்த ஆண்டின் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 20ந்தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் 9ஆம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட சுவாமி தேரில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமியும், அதற்கு பின்னால் வந்த சிறிய தேரில் அம்பாளும் எழுந்தருளினர். இந்த தேர்களுக்கு முன்பு சிறிய சப்பரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேசுரவர் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளினர். காலை 7.40 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்ற பின்னர் மேளதாளங்கள் முழங்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

தேர் கோவிலை சுற்றி தெப்பக்குளம் வீதி வழியாக வந்து காலை 8.40 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அதன் பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

தேரோட்டத்தையொட்டி தேரோடும் வீதியின் இருபுறங்களிலும் இரும்பு தடுப்பு கம்பி வேலிகள் கொண்டு அடைக்கப்பட்டிருந்தது. போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தியும், கட்டுப்பாட்டு அறை அமைத்தும் கண்காணித்தனர். தேர் இழுக்கும் பக்தர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை(பாஸ்) வழங்கப்பட்டு அவர்கள் மட்டும் தேரை வடம் பிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.

விழாவில் கண்டதேவி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தேர் இழுக்கும் பக்தர்களுக்கு பாஸ்

பல்வேறு காரணங்களால் தடைபட்ட தேரோட்டம் நீதிமன்ற உத்தரவின்படி 17 ஆண்டுகளுக்குப் பிறகு 2024-ல் மீண்டும் தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த காலங்களில் இத்தேரோட்டம் மாலை நேரத்தில் நடைபெற்று வந்த நிலையில் பாதுகாப்பு காரணத்திற்காக காலை நேரத்தில் தேரோட்டம் நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும், தேர் வடம் பிடிக்கும் நபர்களுக்கு பாஸ் வழங்கி, அவர்கள் மட்டும் வடம் பிடித்த தேரை இழுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி காலை நேரத்தில் தேரோட்டம் நடத்தப்படுகிறது.