காப்பு கட்டும் நிகழ்ச்சி 
ஆன்மிகம்

கன்னியாகுமரி முத்தாரம்மன் கோவில் கொடை விழா... நாளை தொடங்குகிறது

கொடை விழாவுக்கான கால்நாட்டும் நிகழ்ச்சி மற்றும் பக்தர்கள் விரதம் இருப்பதற்கான காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் முத்தாரம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு மூன்று முகங்களுடன் முத்தாரம்மன் அருள்பாலிக்கிறார். கன்னியாகுமரி ஊர் வெள்ளாள சமுதாய வகை டிரஸ்ட் நிர்வாகத்தில் உள்ள இந்த கோவிலில், ஆண்டுதோறும் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

அவ்வகையில் இந்த ஆண்டின் கொடை விழா நாளை (27-7-2026) தொடங்குகிறது. இந்த கொடை விழா 29-ந் தேதி வரை 3 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

கொடை விழாவுக்கான கால்நாட்டும் நிகழ்ச்சி மற்றும் பக்தர்கள் விரதம் இருப்பதற்கான காப்பு கட்டும் நிகழ்ச்சி கன்னியாகுமரி ஊர் வெள்ளாள சமுதாய வகை டிரஸ்ட் தலைவர் பி. கிருஷ்ணபிள்ளை மற்றும் கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் முன்னிலையில் நடந்தது.

முத்தாரம்மனுக்கு சந்தன அபிஷேகம்

விழாவின் முதல் நாளான (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு கொலு மேளமும், 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு நையாண்டி மேளம் மற்றும் கரகாட்டமும், 10 மணிக்கு வில்லிசையும் 11 மணிக்கு குடி அழைப்பும் நடக்கிறது.

2-வது நாள் (செவ்வாய்) காலை 8 மணிக்கு மகா அபிஷேகமும், 9 மணிக்கு சந்தனக்குடம் எடுத்து வர முத்தாரம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.10.30 மணிக்கு பகவதி அம்மன் கோவிலில் இருந்து சந்தனக்குடம் எடுத்து மேளதாளத்துடன் கோவிலுக்கு ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பகல் 12 மணிக்கு முத்தாரம்மனுக்கு சந்தன அபிஷேகமும் அதைத் தொடர்ந்து பரிவார மூர்த்திகளான உச்சினிமாகாளி அம்மன், சுடலைமாடசுவாமி, பலவேசக்காரன், முண்டன் மற்றும் காலபைரவர் ஆகிய சாமிகளுக்கு சந்தன அபிஷேகமும் சிறப்பு பூஜை மற்றும் அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

அலங்கார தீபாராதனை

மதியம் 1.30 மணிக்கு ருத்ர பூமியான மாசான மூர்த்தி கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு மாசான மூர்த்திக்கு சந்தன அபிஷேகம், சிறப்பு பூஜை மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது.

மாலை 6.30 மணிக்கு முத்தாரம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. 6-45 மணிக்கு நையாண்டி மேளம் மற்றும் கரகாட்டம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு வில்லிசையும், 11 மணிக்கு படுக்கை தீபாராதனையும், நள்ளிரவு 12 மணிக்கு ஊட்டுப்படப்பு தீபாராதனையும் பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது.

3-வது நாள் (புதன்) காலை 8 மணிக்கு அபிஷேகமும், பகல் 11.30 மணிக்கு பூப்படைப்பும், 1.45 மணிக்கு மஞ்சள் நீராடுதல் மற்றும் அம்மன் பரிவார மூர்த்திகளுடன் வீதி உலா வருதலும் நடக்கிறது. மாலை 6.45 மணிக்கு திசைபலியும், இரவு 7.30 மணிக்கு வாழிபாடுதலும், 8.30 மணிக்கு மகா அன்னதானமும் நடக்கிறது.