ஆன்மிகம்

கன்னியாகுமரி: முருகப்பெருமான், வள்ளி- தெய்வானைக்கு ஆராட்டு நிகழ்ச்சி

தைப்பூச திருவிழா நாட்களில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.

கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடந்தது.

திருவிழாவையொட்டி தினமும் அதிகாலையில் நிர்மால்ய தரிசனமும் தொடர்ந்து அபிஷேகமும், சிறப்பு வழிபாடும், யாகசாலை பூஜையும் நடந்தது. உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலும் நடந்தது.

மாலையில் சமய உரை, இரவு பஜனை நடந்தது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க பவனி வந்து அருள்பாலித்தார்.

10-ம் திருவிழாவான தைப்பூச நாளில் காலை 9 மணிக்கு யாக சாலை பூஜை, 11.30 மணிக்கு வெள்ளி அங்கி சாத்தி அலங்கார தீபாராதனை, மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு உற்சவமூர்த்தி கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இரவு 7 மணிக்கு கார்த்திகை பொய்கை திருக்குளத்தில் வேல்முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு தீர்த்தவாரி ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் பொய்கை திருக்குளத்தின் கரையில் வைத்து சிறப்புஅபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

அதன்பிறகு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி, முருகன் குன்றத்தின் மேல் பகுதியில் கோவிலை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT