காரைக்கால் மாங்கனி திருவிழா 
ஆன்மிகம்

காரைக்கால் மாங்கனி திருவிழா... மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பிச்சாண்டவரை நோக்கி வாரி இறைக்கப்பட்ட மாங்கனிகளை, பக்தர்கள் பிடித்து வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.

காரைக்கால்,

மாங்கனி திருவிழாவின் சிகர நிகழ்வான இன்று சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதிஉலாவின்போது பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மாங்கனி திருவிழா

63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற இத்திருவிழா இந்த ஆண்டு நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவின் தொடக்கமாக ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் மாப்பிள்ளை கோலத்தில் பரமதத்தர் எழுந்தருளினார்.

தொடர்ந்து மேளதாளம் முழங்க மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. பாரதியார் சாலை வழியாக காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு தீபாராதனை நடைபெற்றது.

திருக்கல்யாணம்

நேற்று காரைக்கால் அம்மையாரான புனிதவதிக்கும், பரமதத்தருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக சீர்வரிசையுடன் குதிரையில் வந்த பரமதத்தரை புனிதவதி தாயார் எதிர்கொண்டு மணிமண்டபத்துக்கு அழைத்து சென்றார்.

அங்கு யாகங்கள் வளர்க்கப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க சிவாச்சாரியார்கள் திருமாங்கல்யத்தை எடுத்து காண்பிக்க, பக்தர்கள் முன்னிலையில் காரைக்கால் அம்மையார்-பரமதத்தர் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. இதனையடுத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு சோடச உபசாரங்கள் செய்யப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

அம்மையார் திருக்கல்யாணத்தை தரிசனம் செய்தால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்றும், தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும் எனவும் கருதப்படுகிறது. எனவே, இந்த தெய்வீக திருமணத்தை காண உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.

மாங்கனிகள் இறைப்பு

விழாவின் சிகர நிகர்வான மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 9 மணிக்கு சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதிஉலா தொடங்கியது. பிச்சாண்டவர் செல்லும் வீதியெங்கும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு, வீட்டு வாசல்கள் மற்றும் மாடிகளில் இருந்தபடி மாங்கனிகளை வாரி இறைத்தனர்.

இந்த மாங்கனிகளை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம். அதனால் விழாவில் கலந்து கொண்டவர்கள், போட்டி போட்டுக் கொண்டு மாம்பழங்களை பிடித்தனர். வீதியுலா வந்த பிச்சாண்டவருக்கு மாங்கனி, பட்டு வஸ்திரங்களை படைத்தும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இன்று மாலை காரைக்கால் அம்மையார், பிச்சாண்டவரை எதிர்கொண்டு அழைத்து மாங்கனியுடன் அமுது படைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு இறைவன் அம்மையாருக்கு காட்சி அளிக்கும் வைபவம் நடைபெறும். அப்போது அம்மையார் ஜோதி வடிவத்தில் இறைவனிடம் ஐக்கியமாகிறார்.