திருவண்ணாமலை,
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவார பணி நடைபெற்றது.
பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவின்போது கிரிவலம் செல்வதற்காக 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவிலில் பந்தல் அமைக்கும் பணி, மின் விளக்கு அலங்காரம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்களின் பாதுப்பை கருத்தில் கொண்டு அருணாசலேஸ்வரர் கோவில், மாட வீதி மற்றும் கிரி வலப்பாதையில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெறுகின்றன.
இந்த நிலையில் நேற்று கோவிலில் உழவார பணி நடைபெற்றது. இதில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டு கோவிலில் உள்ள கொடிமரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கழுவி சுத்தம் செய்வது, விளக்குகளை சுத்தம் செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டனர்.