சாத்தூர்,
கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் மாதம்தோறும் பவுர்ணமி தினத்தன்று திருக்கோவில் சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது
அவ்வகையில் கார்த்திகை மாத பௌர்ணமி தினம் மற்றும் திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு திருக்கோவிலில் உள்ள கொழுமண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விளக்கு பூஜையை திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் தென்காசி தென்மலை சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு புடவை, குங்குமச்சிமிழ், காமாட்சி விளக்கு மற்றும் பூஜை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
முன்னதாக அம்மனுக்கு பௌர்ணமி தின சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம், திரவியம், விபூதி, இளநீர் உள்ளிட்ட 21 வகையான திவ்ய பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பின்னர் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
கோவிலில் நடைபெற்ற விளக்கு பூஜை, கோவில் இணையதளம் வழியாக நேரலை ஒளிபரப்பும் செய்யப்பட்டது. மேலும் திருக்கார்த்திகை தினம் என்பதால் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாகவும், கார் வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு கோயிலில் பிரகாரத்தின் முன்பு அகல் விளக்கு ஏற்றப்பட்டது. மக்களின் மன அமைதி மற்றும் உலக நன்மை வேண்டி நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.