மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி 
ஆன்மிகம்

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி

5 அடுக்கு தீபம் கொண்ட தீபாராதனைத் தட்டில் தீபம் ஏற்றி பவுர்ணமி நிலவை நோக்கி தீபம் காட்டி ஆராதனை செய்தனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பவுர்ணமி நாட்களில் கன்னியாகுமரி சமுத்திர தீர்த்த ஆரத்தி அறக்கட்டளை சார்பில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அவ்வகையில், கார்த்திகை மாத பௌர்ணமியையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் நேற்று மாலை மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.

மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி

மாலை 6.30 மணிக்கு மேளதாளம் முழங்க தேவாரப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள வேதபாடசாலையில் இருந்து மேளதாளத்துடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி, கடற்கரையில் பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட பரசுராம விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றடைந்தார்.

பரசுராமர் விநாயகர் கோவிலில் பூஜை நடைபெற்றது. சப்த கன்னிகள் பூஜை நடந்தது. அதன் பின்னர் கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்தது. அதையடுத்து சுமங்கலிப் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள். அதன்பிறகு வானத்தில் பவுர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. 5 சிவாச்சாரியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் 5 அடுக்கு தீபம் கொண்ட தீபாராதனைத் தட்டில் தீபம் ஏற்றி பவுர்ணமி நிலவை நோக்கி தீபம் காட்டி ஆராதனை செய்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சமுத்திர தீர்த்த ஆரத்தி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் அனுசுயா தலைமை தாங்கினார். திருவனந்தபுரம் ஆனந்த ஆசிரமத்தைச் சேர்ந்த ஆனந்தகுரு தீபம் ஏற்றி சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் சமுத்திர தீர்த்த ஆரத்தி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜகோபால், ஜெயராம், அஞ்சுகிராமம் மைக்கேல் ராஜ், வக்கீல் ஆறுமுகம் உள்பட திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT