திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவில் இன்று தேரோட்டம் நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், இரவு பல்வேறு வாகனங்களிலும் தெய்வானை அம்பாளுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி நகர்உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று இரவு பட்டாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதனையொட்டி தங்க குதிரை வாகனத்தில் தெய்வானை அம்பாளுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேளதாளங்கள் முழங்க கோவிலுக்குள் உள்ள 6 கால் மண்டபத்திற்கு வந்தார். அங்கு அக்னி வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமானின் தலையில் கிரீடம் சூடி திருக்கரத்தில் சேவல் கொடி சமர்ப்பிக்கப்பட்டது. முருகப்பெருமானின் திருக்கரத்தில் நவரத்தினங்களால் ஆன செங்கோல் சாத்துப்படி செய்து பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் 9-வது நாளான இன்று காலையில் (செவ்வாய்க்கிழமை) திருக்கார்த்திகையையொட்டி சிறப்பு நிகழ்ச்சியாக தேரோடடம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய முருகப்பெருமான், நகர் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக இனறு மாலை 6 மணிக்கு கோவிலுக்குள் பால தீபம் ஏற்றப்படுகிறது. அதேவேளையில் கோவிலில் பெரிய மணி அடித்ததும் அதன் மணி ஓசை கேட்டு மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனைதொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.