கரூர்,
கரூர் மாவட்டம் மாவட்டம் தோட்டக்குறிச்சி மலையம்மன் கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கடந்த மாதம் 29-ஆம் தேதி புதன்கிழமை இரவு மலையம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பூச்சாற்றுதலுடன் திருவிழா தொடங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கடந்த 5-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, 6-ஆம் தேதி புதன்கிழமை ஆகிய இரு நாட்கள் தேரோட்டம் நடைபெற்றது. டிராக்டரில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த தேரில் மலையம்மன் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கிழக்குத் தவுட்டுப்பாளையம், தளவாபாளையம் , மேல்வரத்தை, கீழ்ஒரத்தை, அய்யம்பாளையம், அம்மாபட்டி, ஆவரங்காட்டு புதூர், தர்மராஜபுரம், மேட்டுப்பாளையம், மலையம்பாளையம், முத்துராஜபுரம் உள்ளிட்ட 17 ஊர்களுக்கு அலங்கரிக்கப்பட்ட தேர் சென்றது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பொதுமக்கள் மாவிளக்குகளை கொண்டு வந்து அம்மன் தேர் முன்வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
நேற்று தோட்டக்குறிச்சி பகுதியை தேர் வந்தடைந்ததும், அங்கு ஏராளமான பெண்கள் மாவிளக்குகளை கொண்டு வந்து அம்மன் தேர் முன் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். வாண வேடிக்கை நடைபெற்றது. பின்னர் தேர் தோட்டக்குறிச்சி மலையம்மன் கோவில் வளாகத்திற்கு சென்று நிறுத்தி வைக்கப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மன் முன் படையல் போட்டு பொங்கல் பூஜை செய்தனர். மாலை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முன்னதாக மலையம்மனுக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மலையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.