ஆன்மிகம்

பிரம்மோற்சவ விழா.. சீனிவாசமங்காபுரத்தில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்

கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நிறைவடைந்ததையடுத்து காலை 11 மணியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வரும் 8-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பிரம்மோற்சவ விழா தொடங்குவதற்கு முன்பு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது ஒரு வழக்கமான சடங்காகும்.

அதன்படி நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப் பணி நடந்தது. நிகழ்ச்சியையொட்டி நேற்று அதிகாலை சுப்ரபாதத்தில் சாமி துயிலெழுப்பப்பட்டார். அதன்பிறகு தோமாலை சேவை, கொலு மற்றும் பஞ்சாங்க சிரவணம் நடந்தது.

கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் காலை 6.30 மணியில் இருந்து 11 மணி வரை நடந்தது. அதன் ஒரு பகுதியாக முதலில் கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரைகள், பூஜை பொருட்கள் மற்றும் மற்ற அனைத்துப் பொருட்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டன.

அதன்பிறகு நாமப்பொடி, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சிலை, கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிக்கிழங்கு மற்றும் பிற நறுமணப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட புனிதநீர் கலவை கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. ஆழ்வார் திருமஞ்சனம் நிறைவடைந்ததையடுத்து காலை 11 மணியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பதியைச் சேர்ந்த பக்தர் மணி என்பவர் கோவிலுக்கு 2 திரை சீலைகளை காணிக்கையாக வழங்கினார். இவை, வரவிருக்கும் பிரம்மோற்சவத்தின்போது பயன்படுத்தப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்வில் கோவில் சிறப்பு நிலை துணை அதி காரி வரலட்சுமி, கண்காணிப்பு அதிகாரி கிரிதர், உதவி அதிகாரி கோபிநாத், கண்காணிப்பாளர் ரமேஷ்பாபு, கோவில் ஆய்வாளர்கள் தனசேகர், முனிகுமார், கோவில் அர்ச்சகர் பாலாஜி ரங்காச்சாரியார் மற்றும் பிற அதிகாரிகள் கலந்துகொண்டனர்.