கோப்புப்படம் 
ஆன்மிகம்

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் தூக்கத்திருவிழா: இன்று தொடங்குகிறது

பத்ரகாளி அம்மன் கோவில் தூக்கத்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் மீனபரணி நாளில் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடக்கிறது. குழந்தை பேறு வேண்டியும், குழந்தைகள் நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளுடன் வாழவும் அம்மனை வேண்டி இந்த தூக்க நேர்ச்சை நிறை வேற்றப்படுகிறது.

இங்கு கொல்லங்கோடு கண்ணனாகத்தில் இருந்து மேற்கு நோக்கி சுமார் 500 மீட்டர் தொலைவில் வட்டவிளையில் மூலஸ்தான கோவிலும், கண்ணனாகத்தில் இருந்து கிழக்கு நோக்கி சுமார் 500 மீட்டர் தொலைவில் வெங்கஞ்சியில் தூக்கத் திருவிழா கோவிலும் அமைந்துள்ளன.

இந்நிலையில் இந்த கோவிலில் தூக்கத் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு முலஸ்தான கோவிலில் பள்ளி உணர்த்தல், மகா கணபதி ஹோமமும், காலை 6 மணிக்கு திருவிழா கோவிலில் மகா கணபதி ஹோமம் போன்றவை நடைபெற்றது.

தொடர்ந்து 7 மணிக்கு கொடிமரம் மேளதாளங்களுடன் திருவிழா கோவிலுக்கு கொண்டுவரப்படும். 8.30 மணிக்கு அம்மன் மூலஸ்தான கோவிலில் இருந்து எழுந்தருளி புறக்கால் கிணறு வலம் வந்து கரிவயல், கொல்லங்கோடு மடம், சாஸ்தா நகர், திருமன்னம் சந்திப்பு ஆகிய இடங்களுக்கு சென்று பூஜைகள் பெற்று மீண்டும் மூலஸ்தான கோவில் வந்தடைகிறது.

மாலை 3 மணிக்கு அம்மன் மீண்டும் மேள தாளங்கள் முழங்க எழுந்தருளி கண்ணனாகம் சந்திப்பு வழியாக கீழ வீடு நாகராஜா காவு, இளம்பாலமுக்கு மகாதேவர் கோவில் வழியாக திருவிழா கோவில் வந்தடைகிறது. இரவு 7 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தந்திரி கொட்டாரக்கரை நீலமனை மடம் ஈஸ்வரன் போற்றி கொடியேற்றி வைக்கிறார். பின்னர் வாண வேடிக்கையை தொடர்ந்து தூக்கத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது.