கலைமான் வாகனத்தில் சந்தன மாரியம்மன் வீதி உலா 
ஆன்மிகம்

கொட்டாரம்: கலைமான் வாகனத்தில் சந்தன மாரியம்மன் வீதி உலா

வீதி உலாவின்போது அம்மனுக்கு பக்தர்கள் தேங்காய் பழம் படைத்து, திருக்கணம் சாத்தி வழிபட்டனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரத்தில் சந்தன மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் சித்திரை விஷு விழா இன்று நடந்தது. இதையொட்டி சந்தன மாரியம்மனுக்கு எண்ணெய், பால், மஞ்சள் பொடி, தயிர், களபம், சந்தனம், குங்குமம், பன்னீர், இளநீர், தேன் உள்பட பல வகையான திரவியங்களாலும் புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதன் பிறகு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பின்னர் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதி உலாவின்போது அம்மனுக்கு பக்தர்கள் தேங்காய் பழம் படைத்து, திருக்கணம் சாத்தி வழிபட்டனர். வாகன பவனி முடிந்த பிறகு பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.