திருத்தணியில் குவிந்த பக்தர்கள் 
ஆன்மிகம்

கிருத்திகை சிறப்பு வழிபாடு... திருத்தணியில் திரளான பக்தர்கள் தரிசனம்

கிருத்திகையை முன்னிட்டு மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், மற்றும் கிருத்திகை நாட்களில் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் சித்திரை மாத கிருத்திகை மற்றும் ஞாயிறு விடுமுறை தினமான இன்று திருத்தணியில் இன்று காலை முதலே பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. அண்டை மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

பொது தரிசன வழியில் பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். அதே போல் 100 ரூபாய் சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

கிருத்திகையை முன்னிட்டு மூலவர் முருகப்பெருமானுக்கு பால், தயிர், பழம், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், இளநீர் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு ஆராதனைக்குப் பிறகு தங்க கவச அலங்காரத்தில் மூலவர் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.