கும்பாபிஷேகம் 
ஆன்மிகம்

குமரக்கோட்டம் முருகன் கோவில் கும்பாபிஷேகம்- ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கந்தபுராணம் அரங்கேறிய மண்டபத்தின் 8 தூண்களுக்கும் தங்க முலாம் பூசிய தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

குமரகோட்டம் முருகன் கோவில்

காஞ்சீபுரத்தில் மண் தலமாக விளங்கும் ஏகாம்பரநாதர் கோவிலுக்கும் சக்தி பீட தலமாக விளங்கும் காமாட்சியம்மன் கோவிலுக்கும் இடையே மேற்கு ராஜ வீதி பகுதியில் அமைந்துள்ளது குமரக்கோட்டம் முருகன் கோவில். கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலம் என்ற சிறப்பு பெற்ற இந்த கோவிலில், இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்றன.

பல லட்சம் ரூபாய் செலவில் கோவில் முழுவதும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோவில் வளாகத்தில் மூலவருக்கென தனி யாகசாலையும் பரிவார மூர்த்திகளுக்கென 20 யாக சாலைகளும் அமைக்கப்பட்டன. கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

கும்பாபிஷேகம்

பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், கலசங்களில் நிரப்பப்பட்டு ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டன. யாகசாலை பூஜையில் 100 சிவாச்சாரியார்கள் 40 திருமுறை ஓதுவார்கள் கலந்துகொண்டு பூஜை செய்தனர். யாகசாலை பூஜை இன்று அதிகாலை நிறைவடைந்த நிலையில், மகா பூர்ணாஹுதி, கடம்புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புனித நீர் கலசங்கள் கோபுர உச்சியை அடைந்ததும், அதிகாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆரத்தி நடைபெற்றது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

திருப்பணிகள் என்னென்?

பல லட்சம் ரூபாய் செலவில் கோவில் முழுவதும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவிலில் உள்ள சன்னதிகள் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ளது. தண்டாயுதபாணி சுவாமி சன்னதி முழுவதும் புனரமைக்கப்பட்டு தங்க முலாம் பூசிய தகடுகள் பதிக்கப்பட்டு பொலிவுடன் காட்சி அளிக்கிறது. கந்தபுராணம் அரங்கேறிய மண்டபத்தின் 8 தூண்களுக்கும் தங்க முலாம் பூசிய தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன.

மூலவரின் கருவறை சன்னதி நுழைவு வாயில் பகுதியில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வெள்ளித்தகடுகள் முலாம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் உற்சவ காலங்களில் திருவீதி உலா செல்ல முருகப்பெருமானுக்கு வெள்ளி மயில் வாகனமும் உபயதாரரால் வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT