மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கும்பாபிஷேகத்தையொட்டி கோபுரத்தில் வர்ணம் பூசும் பணியும் மற்றும் வெளிப்புறத்தில் உள்ள பணிகள் அனைத்தும் நிறைவுபெற்றது. இதையடுத்து கோவிலில் உள்ள உபசன்னதிகளில் சீரமைப்பு பணிகளை தொடங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி மீனாட்சி அம்மன் சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதியை தவிர, 415 பரிவார தெய்வங்களின் சன்னதிகள் மற்றும் கொடிமரத்திற்கான பாலாலயம் பூஜை நேற்று முன்தினம் நடந்தது. பாலாலய பூஜைக்கான யாகசாலை பூஜைகள் ஸ்தானிக பட்டர்கள் ஹலாஸ், செந்தில் பட்டர் தலைமையில் தொடங்கியது. அதில் நடராஜர், துர்க்கை, லட்சுமி உள்ளிட்ட 415 பரிவார தெய்வங்களை சித்திரமாக வரைந்து, அதில் அந்த தெய்வங்களை உருவேற்றினார்கள்.
பின்னர் காலை 9 மணிக்கு மேல் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கலசங்கள் புறப்பாடு நடந்து, 9.30 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கான பாலாஸ்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து பரிவார தெய்வங்கள் உள்ள சன்னதிகளில் சீரமைப்பு பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.