தீமிதித்த பக்தர் 
ஆன்மிகம்

சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா

கோவில் பூசாரி முதலில் குண்டத்தில் இறங்கி தீமிதித்தபின்னர் மற்ற பக்தர்கள் தீமிதித்தனர்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் பழமைவாய்ந்த தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடம் தோறும் கம்பம் மற்றும் குண்டம் திருவிழா நடைபெறும். அவ்வகையில் இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி பூச்சாற்றுதலுடன் தொடங்கியது.

விழாவின் சிகர நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று இரவு அம்மன் அழைப்பு நடைபெற்றது. கோவில் எதிர்புறமாக பத்தடி நீளம், இரண்டடி அகலத்தில் குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. இன்று காலை 8 மணிக்கு பூசாரி மற்றும் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் பவானி ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு, கையில் வேப்பிலை எடுத்து ஈர உடைவுடன் மங்கள வாத்தியம் முழங்க கோவிலுக்கு புறப்பட்டு ஊர்வலமாக வந்தார்கள்.

கோவிலை அடைந்ததும் பூசாரி கோகுல கிருஷ்ணன் முதலில் குண்டத்துக்கு பூஜை செய்தார். அதன் பிறகு மலர் செண்டு ஒன்றை குண்டத்தின் நடுவே உருட்டிவிட்டதுடன், தனது கையால் மூன்று முறை நெருப்பை அள்ளி குண்டத்திற்குள் வீசினார். பின்னர் ஒரு கையில் மணியம் மற்றொரு கையில் கற்பூர தட்டுடன் குண்டத்தில் இறங்கி தீமிதித்தார்.

அதன்பின்னர் பக்தர்கள் குண்டம் இறங்கி தீமிதித்து அம்மனை வழிபட்டனர். சத்தியமங்கலம் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 2000 பேர் தீமிதித்தார்கள்.