குன்றத்தூரில் நடைபெற்ற தேரோட்டம் 
ஆன்மிகம்

குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா: விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்

தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பூந்தமல்லி,

குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற திருநாகேஸ்வர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. நவகிரக ஸ்தலங்களில் ராகு ஸ்தலமாக விளங்கக்கூடிய இக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் ஏழாம் நாளான இன்று மகாரத உற்சவம் நடைபெற்றது.

காலையிலேயே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் திருநாகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன்பின்னர் அமைச்சர் தா.மோ. அன்பரசன், எம்.எல். ஏ. செல்வப்பெருந்தகை தேரின் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர். கோவிலின் முக்கிய மாட வீதிகள் வழியாக தேர் ஊர்வலமாக சென்றது.

தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே தண்ணீர், மோர், குளிர்பானங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. குன்றத்தூர் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர் திருவிழாவை முன்னிட்டு வாகனங்கள் அனைத்தும் பஜார் பகுதிக்கு வராமல் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.

SCROLL FOR NEXT