தூத்துக்குடி,
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி கொடை விழாவிற்காக நாளை கால் நாட்டப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ குரங்கணி முத்துமாலை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆனி பெருந்திருவிழா (கொடை விழா) வருகின்ற ஜூலை மாதம் 14ம் தேதி (செவ்வாய் கிழமை) நடைபெறுகிறது.
ஆனி கொடை விழாவை முன்னிட்டு நாளை (30.6.2026)) செவ்வாய்க்கிழமை கால்நாட்டு விழா நடைபெறுகிறது. இதையொட்டி நாளை அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், அதை தொடர்ந்து சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது.
நாளை மதியம் 1 மணிக்கு முத்துமாலை அம்மன், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெறும். அதன்பின் முப்புடாதி அம்மன் சன்னதி முன்பு, கால் நாட்டப்படுகிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஆனி கொடை விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.