திருவாரூர்,
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் லட்சுமி குபேர பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பஞ்ச பூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்குகிறது. சப்த விடங்க தலங்களில் முதன்மையானது. இந்தகைய சிறப்புமிக்க கோவிலில் முதல் பிரகாரத்தில் யோக நிஷ்டையில் மகாலெட்சுமி சன்னதி அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜப்பசி மாதம் அமாவாசை தினத்தில் இந்த சன்னதியில் லட்சுமி குபேர பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று ஜப்பசி அம்மாவாசையை முன்னிட்டு, யாகசாலை பூஜையுடன் லட்சுமி குபேர பூஜை நடந்தது. சகல செல்வங்களும், வியாபாரமும் பெருகிட லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது குபேர பூஜையின் சிறப்பாகும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் திருவாரூர் அருகே உள்ள திருகண்ணமங்கை கோவிலில் லட்சுமி குபேர பூஜை நடந்தது. தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்கள், பணம் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.