மனித வாழ்க்கை தினமும் பல்வேறு திருப்பங்கள் நிறைந்தது. வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு நிலைகள் மனிதனுக்கு ஏற்படுவது உண்டு. அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு சமாளிப்பதில்தான் மனிதனின் வெற்றியே இருக்கிறது. இவற்றையெல்லாம் எதிர்கொள்வதற்கு எப்போதுமே தயாராக இருக்கவேண்டும்.
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் பொறுமையை கடைபிடியுங்கள். நீங்கள் அதிகம் சகித்துக் கொள்ளுங்கள். எந்நேரமும் தயாராக இருங்கள். அல்லாஹ்வுக்கு பயந்து நடந்துகொள்ளுங்கள். நீங்கள் வெற்றியடைவீர்கள்". (திருக்குர்ஆன் 3:200)
மேற்கண்ட இறை மறை வசனம், நாம் எப்போதும் பொறுமையாகவும், அதே சமயம் எதற்கும் தயாராகவும் இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால்தான் நாம் வெற்றி பெற முடியும் என்பதையும் அழுத்தமாகக் கூறுகிறது.
நபிகள் நாயகம் சொன்னார்கள்: “ஐந்து விஷயங்களுக்கு முன் ஐந்து விஷயங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதாவது முதுமை வரும் முன் இளமை, நோய் வரும் முன் ஆரோக்கியம், ஏழ்மை வரும் முன் செல்வம், வேலை வரும் நேரத்துக்கு முன் ஓய்வு, மரணம் வரும் முன் வாழும் நாள்”. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: ஹாகிம்)
இந்த ஐந்தும் நமக்கு வருவதற்கு குறிப்பிட்ட நேரமோ, காலமோ இல்லை. அது எப்போது வேண்டுமானாலும், எந்த வடிவத்திலும் வரலாம். அதற்கு நாம் தான் எந்த நேரமும் மிகத் தயாராக, முன் தயாரிப்புடன் இருக்க வேண்டும்.
குறிப்பாக மரணத்தை நம் மறந்து விடக்கூடாது. இந்த ஒரு நினைவு இருந்தாலே போதும், நமது பல்வேறு காரியங்கள் மிகச் சிறப்பாக நடந்தேறிவிடும். நமது மரணம் நமக்கு அவ்வளவு சீக்கிரம் இப்போதைக்கு வராது என்ற எண்ணம்தான் நம்மை சோம்பேறிகளாக்கி விடுகின்றன. நமது தயார் நிலையும் கேள்விக்குறியாகி விடுகிறது.
எனவே நல்ல காரியங்களை முன்கூட்டியே செய்துவிட வேண்டும். நாளை பார்க்கலாம்; நாளை மறுநாள் பார்க்கலாம் என்று சொல்வதெல்லாம் நிச்சயம் அவை நடக்கப் போவதில்லை என்பதற்கான அடையாளமே தவிர வேறொன்றுமில்லை.
மரணம் மனிதனுக்கு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை திருக்குர் ஆன் இவ்வாறு கூறுகிறது: “இறுதியில் அவர்களில் எவருக்கேனும் மரணம் வந்து விடுமானால், 'என் இறைவனே, நான் விட்டு வந்துள்ள உலகுக்கு என்னைத் திரும்ப அனுப்புவாயாக. அங்கு நான் நற்செயல் புரிவேனே, என்று அவன் கூறத் தொடங்குவான்'. ஆனால் அவ்வாறு ஒருபோதும் நடக்காது". (திருக்குர் ஆன் 23: 99,100)
ஆகவே, போன உயிர் போனதுதான். அது திரும்பவும் இங்கு வரப்போவதில்லை. எனவேதான் நாம் வாழும் காலத்திலேயே நல்ல பல நற்செயல்களை செய்து கொள்ள வேண்டும். அது தான் நமது வாழ்க்கையை வளமானதாக, வளர்ச்சியுடையதாக மாற்றும் என்பதையும் இறைவன் இப்படிக் கூறிக்காட்டுகின்றான்:
“ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம். மேலும், (மறுமையிலோ) அவர்கள் செய்து கொண்டிருந்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்". (திருக்குர்ஆன் 16:97)
எனவே, அன்றாடம் நாம் நற்செயல்களை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். நமக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கிற போதெல்லாம் உதவி உபகாரங்களை, சரியான சேவைகளை, பயனுள்ள தொண்டுகளை செய்துகொண்டே இருக்க வேண்டும். இவற்றில்தான் நமக்கான வெற்றி ஈருலகிலும் இருக்கிறது.
குறிப்பாக இப்போது புனிதமிகு ரமலான் மாதம் வரப்போகிறது, எனவே அந்த நன்னாட்களை பெரும் வாய்ப்பாக பயன்படுத்தி நற்காரியங்களைச் செய்ய நாம் முன்வர வேண்டும். அதற்கு இப்போதிருந்தே நாம் தயாராகிக் கொள்ள வேண்டும். ஏனெனில் ரமலான் மாதத்தில் செய்யப்படும் எந்த ஒரு நற்காரியத்திற்கும் எழுபது மடங்கு நன்மை அதிகமாக வழங்கப்படுகிறது என நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். வாருங்கள் இன்றே ரமலான் நோன்புக்கு தயாராவோம், நன்றே செயல்படுவோம்!
-மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.