திருச்சி மாவட்டம் குமாரவயலூரில் சுப்ரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. அருணகிரியார் திருப்புகழ் பாட முருகப்பெருமான் அருளிய தலம் இது.
திருவண்ணாமலையில் அருணகிரியாரை காப்பாற்றிய முருகப் பெருமான், ‘முத்தைத் திரு’ என அடியெடுத்துக் கொடுத்தார். அதன் பின்னர் அருணகிரியார் திருப்புகழ் ஏதும் பாடவில்லை. முருகப் பெருமானின் அருள் வேண்டி காத்திருந்தார் அருணகிரியார். இதைத் தொடர்ந்து அவரை வயலூருக்கு வருமாறு (அசரீரி) அழைத்தார் முருகப் பெருமான். மகிழ்ந்த அருணகிரியார் வயலூருக்குச் சென்றார்.
ஆனால், அங்கு அவருக்கு முருகப் பெருமான் தரிசனம் தரவில்லை. வருத்தமடைந்த அருணகிரியார், “அசரீரி பொய்யோ?” என உரக்கக் கத்தினார். அப்போது விநாயகர் அவர்முன் தோன்றி, “அசரீரி உண்மையே” என்று கூறி, அங்கிருந்த சுப்பிரமணியரைக் காட்டி அருளினார்.
பின்னர் சுப்பிரமணியர் தனது வேலால் அருணகிரியாரின் நாக்கில் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எழுதினார். அதன் பின்னர், அருணகிரியார் இத்தல முருகனைப் போற்றி 18 பாடல்கள் பாடினார். அத்துடன் பல முருக தலங்களுக்கும் சென்று திருப்புகழ் பாடினார். இவ்வாறு, திருப்புகழ் என்ற ஒப்பற்ற பாடல்கள் கிடைக்க அருள் செய்தவர் இங்குள்ள முருகப்பெருமான் ஆவார்.