மீன் வடிவ அசுரனை வதம் செய்த முருகப்பெருமான் 
ஆன்மிகம்

மீன் வடிவ அசுரனை வதம் செய்த முருகப்பெருமான்... தரங்கம்பாடி கடற்கரையில் நடைபெற்ற ஐதீக விழா

இரணியாசுரனை திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி வதம் செய்யும் ஐதீக நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு அருகே பிரசித்தி பெற்ற திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அறுபடை வீடுகளுக்கு இணையான தலமாகமாகவும், சோழநாட்டு திருச்செந்தூர் என்றும் போற்றப்படுகிறது. திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகப்பெருமான், அதன்பின்னர் மாயையால் தரங்கம்பாடி கடலில் மறைந்திருந்த சூரனின் இரண்டாவது மகனான இரணியாசுரனை வதம் செய்து சாப தோஷம் ஏற்பட, திருவிடைக்கழி தலத்தில் சிவனை பூஜித்து தனக்கு ஏற்பட்ட சாபதோஷம் நீங்க பெற்ற தலமாகவும் திகழ்ந்து வருகிறது.

அருணகிரிநாதரின் திருப்புகழில் போற்றிப் புகழப்பட்டுள்ள இக்கோவில் சுப்பிரமணிய சுவாமியும், சிவபெருமானும் ஒன்று என்ற தத்துவத்தில் ஒரே கருவறையில் அமைக்கப்பட்டுள்ள ஒரே திருத்தலமாகும். இங்கு சிவபெருமானும் முருகப்பெருமானும் ஒரே கருவறையில் எழுந்தருளி உள்ளதால் முருகப் பெருமான் சிவ சொரூபமாக காட்சி அளிக்கிறார்.

இரணியாசுரனை முருகப்பெருமான் வதம் செய்யும் ஐதீக நிகழ்ச்சி

சூரசம்ஹாரம்

சிறப்புமிக்க இக்கோவிலில் வைகாசி சதய திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆறாம் திருநாளான நேற்று காலை சுப்பிரமணிய சுவாமிக்கு கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மாலையில் தரங்கம்பாடி கடற்கரைக்கு எழுந்தருள செய்யப்பட்டார்.

அங்கு 1300 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க மாசிலாமணிநாதர் கோலிலில் இருந்து ஞானாம்பிகை அம்மனிடம் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் கடற்கரையில் மீன் வடிவில் ஒளிந்திருந்த இரண்யாசுரனை சுப்பிரமணிய சுவாமி (முருகப்பெருமான்) வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றது.

சீர்வரிசை

விழாவில் மயிலாடுதுறை மாவட்ட தரங்கம்பாடி தலைமை மீனவ பஞ்சாயத்தார் மற்றும் கிராமத்தினர் ரேணுகா தேவி கோவிலிருந்து சீர்வரிசை எடுத்துவந்து முருகனுக்கு சமர்ப்பித்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெயராமன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பத்திரிநாராயணன், செயல் அலுவலர் பிரேம்குமார் மற்றும் தரங்கம்பாடி தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.