கிருஷ்ண ஜெயந்தி என்பது ஒரு அவதாரத்தின் துவக்கத்தைக் கொண்டாடும் விழா மட்டுமல்ல; அன்பு, பக்தி, தர்மம், கடமை ஆகியவற்றை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் புனித நாளாகும்.
பகவான் மகாவிஷ்ணு, உலக நன்மைக்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். இந்த அவதாரங்களில் 10 அவதாரங்கள் (தசாவதாரம்) சிறப்புக்குரியதாக போற்றப்படுகின்றன. இவற்றில், கிருஷ்ணாவதாரம் தெய்வீக குணங்கள் முழுமையாக வெளிப்பட்ட அவதாரம் ஆகும். இதனால் இந்த அவதாரம் 'பூர்ணவதாரம்' (முழுமையான அவதாரம்) என்று அழைக்கப்படுகிறது.
பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கை, மக்களின் மனதை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். கிருஷ்ண அவதாரம், மனித குலத்திற்கு வாழ்வியல் நெறிகளையும், அறம், கடமை, பக்தி ஆகியவற்றின் உயர்ந்த தத்துவங்களையும் உணர்த்துகிறது. இத்தகைய சிறப்புமிக்க அவதார தினத்தை போற்றும் வகையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் அமைந்துள்ளது.
ஆம், என்றென்றும் மக்களை நல்வழிப்படுத்தும் மகத்தான கீதோபதேசத்தை வழங்கிய கண்ணனின் அவதார தினத்தையே பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என பல்வேறு பெயர்களில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த தினத்தில், நள்ளிரவு வேளையில் மதுரா நகரச் சிறைச்சாலையில் தேவகி- வசுதேவரின் எட்டாவது மகனாக கிருஷ்ணர் (கண்ணன்) அவதரித்தார். கொடுங்கோலன் கம்சனை வதம் செய்து, உலகில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக கம்சனின் வம்சத்திலேயே கிருஷ்ணர் அவதரித்தார்.
தேவகியின் 8-வது மகனால் தனது உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த கம்சன் எப்படியும் கண்ணனை கொல்வதற்கு வருவான் என்பது வசுதேவருக்கு தெரியும்.
அதனால்தான் பகவான் மகா விஷ்ணு, 8-வது குழந்தையாகத் தான் அவதரிக்கும்போது செய்ய வேண்டியவை குறித்து வசுதேவருக்கு சில கட்டளைகளை வழங்கினார். தான் தேவகியின் வயிற்றில் இருந்து அவதரித்த உடனே, தன்னை மதுரா சிறையிலிருந்து கம்சனின் கண்ணில் படாமல் ஆயர்பாடியில் (கோகுலம்) உள்ள நந்தகோபர்-யசோதை தம்பதியரின் இல்லத்திற்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்றும், அதே இரவில் யசோதைக்கு ஒரு பெண் குழந்தை (யோகமாயை) பிறக்கும் என்றும், அந்தப் பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு மீண்டும் சிறைச்சாலைக்கு வந்துவிடவேண்டும் என்றும் கூறினார்.
பகவானின் வாக்குப்படி, எட்டாவது குழந்தையாக ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தவுடன் சிறைக்கதவுகள் தானாகவே திறந்தன, காவலர்கள் உறங்கினர். வசுதேவர் குழந்தையைக் கூடையில் சுமந்து, ஆதிசேஷன் குடையாக வர, பெருக்கெடுத்து ஓடிய யமுனை நதியைக் கடந்து சென்று குழந்தைகளை வெற்றிகரமாக மாற்றினார்
ஆயர்பாடியில் உள்ள நந்தகோபர் -யசோதையின் இல்லத்தில் வளர்ந்த பாலகிருஷ்ணர், தனது பிஞ்சுப் பருவத்திலேயே எண்ணற்ற லீலைகளைப் புரிந்து அனைவரது உள்ளங்களையும் கொள்ளைக்கொண்டார்.
கிருஷ்ணரின் வசீகரமான புல்லாங்குழல் இசையால் மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் ஈர்க்கப்பட்டன. வெண்ணெய் திருடி உண்பது, ஆயர்குலச் சிறுவர்களுடன் விளையாடியது என அவரது குழந்தைப் பருவம் குறும்புதனங்கள் நிறைந்தவை. அதேவேளையில், தன்னை அழிக்க வந்த பல்வேறு அசுரர்களை அழித்து மக்களைக் காத்தார்.
கிருஷ்ணரின் வேண்டுகோளின் படி, தனக்குச் செய்யவேண்டிய வழிபாடு மறுக்கப்பட்டதால், கோபமுற்ற இந்திரன் கோகுலத்தில் பெரு மழையைப் கிருஷ்ணன் கோவர்தன மலையை பொழிவித்தபோது, தன் சுண்டு விரலால் குடை போலத் தூக்கி, மக்களை பாதுகாத்தார். பின்னர் மதுராவுக்குச் சென்று கம்சனை வதம் செய்து, தர்மத்தை நிலைநாட்டினார்.
இவ்வாறு குழந்தைப் பருவத்திலேயே தமது தெய்வீக ஆற்றலால் உலகைக் காத்த கண்ணன், பக்தர்களின் உள்ளங்களில் என்றும் நீங்காத இடம் பிடித்த இறைவனாகத் திகழ்கிறார்.
கிருஷ்ண ஜெயந்தி நாளில், கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறும். வீட்டின் நுழை வாசலில் இருந்து பூஜை அறை வரை அரிசி மாவினால் குழந்தை கிருஷ்ணரின் திருவடிகளை வரைந்து, "கண்ணன் நம் வீட்டிற்குள் எழுந்தருளுகிறார்” என்ற நம்பிக்கையுடன் அவரை வரவேற்பார்கள். வீடுகளையும், பூஜை அறைகளையும் மலர்கள் மற்றும் மாவிலைத் தோரணங்களால் அழகுபடுத்தி, கிருஷ்ணரின் திருவுருவத்துக்கு புத்தாடை அணிவித்து, நெற்றியில் திலகம் சாற்றி வழிபடுவர்.
கண்ணனுக்கு உகந்ததாகக் கருதப்படும் வெண்ணெய், தயிர், அவல், சீடை, முறுக்கு, அப்பம், நாவல் பழம் உள்பட பல்வேறு நைவேத்யங்களைப் படைத்து சிறப்பு பூஜைகள் செய்வார்கள். கோவில்களில் உறியடித் திருவிழாவும், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற போட்டிகளும் மிகுந்த உற்சாகத்துடன் நடத்தப்படும்.
குழந்தைகள் தங்களின் மனதுக்கு பிடித்தமான கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து கண்ணனின் லீலைகளை நினைவூட்டும் வகையில் மகிழ்ச்சியாக உலா வருவர்.
மேலும், சில பகுதிகளில் உயரத்தில் கட்டப்பட்ட தயிர்க்குடத்தை இளைஞர்கள் குழுவாகச் சேர்ந்து உடைக்கும் 'தஹி ஹண்டி' விழாவும் களைகட்டும். இவ்வாறு பக்தி, மகிழ்ச்சி, பாரம்பரியம் ஆகியவை ஒன்றிணைந்து, கிருஷ்ண ஜெயந்தி விழாவைச் சிறப்பிக்கின்றன.
“கிருஷ்ண ஜெயந்தி என்பது ஒரு அவதாரத்தின் துவக்கத்தைக் கொண்டாடும் விழா மட்டுமல்ல; அன்பு, பக்தி, தர்மம், கடமை ஆகியவற்றை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் புனித நாளாகும்”
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சில பொறுப்புகளும் கடமைகளும் (தர்மம்) உள்ளன. அந்த கடமையில் இருந்து தவறக்கூடாது. வாழ்வில் எத்தனை சவால்கள் வந்தாலும், எப்போதும் உண்மை மற்றும் நீதியின் பாதையிலேயே நடக்க வேண்டும் என்பது கண்ணனின் உபதேசம். தர்மத்தின் வழிகாட்டியாக விளங்கிய கண்ணனின் திருவடிகளை சரண் அடைந்து, அவரது அருளையும் நல்லெண்ணத்தையும் வளர்ப்போம்.
இந்த ஆண்டு 4-9-2026 அன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதற்காக கிருஷ்ணர் எழுந்தருளியிருக்கும் தலங்களில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நெல்லை இஸ்கான் கோவிலில் விசேஷ தரிசனம், சிறப்பு பூஜைகள், மஹா ஆரத்தி, ஹரிநாம சங்கீர்த்தனம் என நாள் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கிருஷ்ணர், ராதை வேடமணிந்து கோவிலுக்கு வருகை தரும் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் சிறப்பு பரிசுகளையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.