பாகற்காய் மண்டபத்தில் எழுந்தருள, தங்கப் பல்லக்குகளில் புறப்பட்டு வந்த சுவாமி-அம்பாள் 
ஆன்மிகம்

சித்திரை திருவிழா.. தங்கப்பல்லக்கில் புறப்பட்டு பாகற்காய் மண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சி -சுந்தரேஸ்வரர்

ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாள் வீதியுலாவின்போது சாலையின இருபுறங்களிலும் பொதுமக்கள் திரண்டு நின்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

மதுரை,

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா தொடங்கியதில் இருந்து சுவாமி -அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருகின்றனர். கடந்த 3 நாட்களில் இரவு நேரங்களில் மாசி விதிகளில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வருகின்றனர். இதனை காண்பதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் விதிகளில் குவிகின்றனர்.

மாலை 6 மணி முதல் குடும்பம் குடும்பமாக வருபவர்கள், சாலையின இருபுறங்களிலும் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். சுவாமி ஊர்வலத்தின்போது கலைக் குழுவினரின் கண்கவர் நடனம் நடைபெறுகிறது. குழந்தைகள், சிறுமிகள் பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்து வருகின்றனர்.

மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர்-பிரியாவிடை

சித்திரை திருவிழாவின் 4-ம் நாளான இன்று காலை 9 மணிக்கு தங்கப்பல்லக்குகளில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும் பல்லக்கு புறப்பாடு நடைபெற்றது. கிழக்கு சித்திரை வீதி, மீனாட்சி கோவில் தெரு, தெற்கு ஆவணி மூல வீதி, தொட்டியன் கிணற்று தெரு, சின்னக்கடை தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரத்திற்கு சென்றனர். அங்குள்ள பாகற்காய் மண்டபத்தில் (பாவக்காய் மண்டபம்) சுவாமி- அம்பாள் எழுந்தருளினர். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இன்று மாலை வரை பாகற்காய் மண்டபத்தில் சுவாமி- அம்பாள் அருள்பாலிப்பார்கள். 6 மணிக்கு பின் சுவாமி-அம்பாள் மீண்டும் தெற்கு வாசல், சின்ன கடை தெரு வழியாக கோவிலுக்கு திரும்புகிறார்கள். இதையொட்டி அந்த பகுதியில் இன்று ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.