மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நாரைக்கு முக்தி கொடுத்த அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூலத்திருவிழாவில், சிவபெருமானின் திருவிளையாடல் லீலைகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தும் முக்கிய உற்சவம் நேற்று தொடங்கியது. முதல் நாளில் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெற்றது. சுவாமி கருங்குருவிக்கு உபதேசம் செய்த அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இரண்டாம் நாளான இன்று, நாரைக்கு முக்தி கொடுத்த அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த திருக்கோல காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்த திருவிளையாடல் லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-
மதுரைக்கு தெற்கே ஒரு தடாகத்தில் நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த குளத்தில் நீர் வற்றியதால் நாரை மற்றொரு குளத்திற்கு சென்றது. அக்குளத்தில் முனிவர்கள் தினமும் வந்து நீராடினர். அப்போது அவர்கள் மீது குளத்தில் இருந்த மீன்கள் புரண்டு விளையாடின. முனிவர்கள் மீது புரண்டு விளையாடிய மீன்களை உண்ணக்கூடாது எனக்கருதி அந்த மீன்களை நாரை உண்ணாமல் இருந்தது. அப்போது முனிவர்கள் பேசியதை அறிந்த நாரை மதுரையை பற்றி தெரிந்து மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்திற்கு வந்தது. அங்கு குளத்தில் நீராடி இறைவனை வணங்கி முக்திப் பேறு பெற்றது.
அப்போது அந்த நாரை இறைவனிடம், பொற்றாமரைக்குளத்தில் இனிமேல் நீர்வாழ் உயிர்கள் எதுவும் இருக்கக் கூடாது. நீர்வாழ் உயிர்கள் இருந்தால் அவற்றை பறவைகள் உண்ணக்கூடும். இதனால் அந்த பறவைகளுக்கு பாவம் வந்துசேரும். எனவே பொற்றாமரைக்குளத்தில் நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்று வரம் வாங்கியதாக ஐதீகமாக நம்பப்படுகிறது. நாரைக்கு இறைவன் வழங்கிய வரத்தினால் இன்று வரை பொற்றாமரைக்குளத்தில் நீர்வாழ் உயிரினங்கள் இல்லை என்பது ஐதீகம்.
திருவிளையாடல் லீலை உற்சவத்தில் நாளை (18-ந் தேதி) மாணிக்கம் விற்ற லீலை நடைபெறுகிறது. 19-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 20-ந் தேதி உலவவாக்கோட்டை அருளியது, 21-ந் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை நடைபெறுகிறது.
22-ந் தேதி காலை சுவாமி வளையல் விற்ற லீலையும், இரவு சுந்தரேஸ்வரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. 23-ந் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 24 ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும், 25 ந் தேதி விறகு விற்ற லீலையும் நடக்க உள்ளது. 26 ந் தேதி சட்டத்தேர் வீதி உலாவும், இரவு சப்தாவரணத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்வும் நடைபெறும். 27-ந் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.