மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் இன்று பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் காட்சி அளித்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூலத்திருவிழாவில் திருவிளையாடல் லீலை நடைபெறும் முக்கிய உற்சவம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு லீலை தொடர்பான அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் அருள்பாலித்தார்.
கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை, நாரைக்கு முக்தி கொடுத்தல், மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொற்கிழி வழங்கிய லீலை, உலவாக்கோட்டை அருளிய லீலை, பாணனுக்கு அங்கம் வெட்டுதல் லீலை, வளையல் விற்ற லீலை, நரியை பரியாக்கிய லீலை ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்வான பிட்டுக்கு மண் சுமந்த லீலை இன்று நடைபெற்றது.
இதையொட்டி சுந்தரேஸ்வரர் தங்க மண்வெட்டி, தங்க மண் கூடை அலங்காரத்தில் மீனாட்சியுடன் அருள்பாலித்தார். பின்னர் சுவாமியும், அம்மனும் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து கிளம்பி நான்கு சித்திரை வீதி, கீழமாசி வீதி, பழைய சொக்காநாதர் கோவில், சிம்மக்கல் வழியாக பொன்னகரம் வைகை ஆற்றின் தென்கரையில் புட்டுத்தோப்பில் உள்ள கோவிலில் எழுந்தருளினார்கள்.
அங்கு மதியம் 12.55 மணிக்கு மேல் பிட்டு மண் சுமந்த லீலை நடந்தது. அதில் சுந்தரேசுவரர் சுவாமியாக அம்பி என்ற சந்தோஷ் பட்டரும், பாண்டிய மன்னராக ஹலாஸ் பட்டரும் பிட்டு மண் சுமந்த திருவிளையாடல் லீலையை நடித்து காண்பித்தனர். புட்டுத்தோப்பு பகுதியில் நடைபெற்ற இந்த லீலையை காணவும் அங்கு எழுந்தருளிய இறைவனை காணவும் பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பின்னர் லீலை முடிந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சியில் பாண்டிய மன்னனாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். பிட்டுக்கு மண் சுமந்த லீலையில் பங்கேற்ற முருகப்பெருமான், வருகிற 28-ந்தேதி வரை மதுரையில் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த திருவிளையாடல் லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-
வைகை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தை அடைக்க வீட்டிற்கு ஒருவர் வர வேண்டும் என்று பாண்டிய மன்னன் ஆணையிட்டார். அப்போது வந்தி என்னும் பிட்டு விற்கும் மூதாட்டி யாருமில்லாமல் தவித்தார். அப்போது இறைவனே கூலியாளாக வடிவெடுத்து வந்து, வந்தி தந்த பிட்டுக்காக மண் சுமப்பதாகக் கூறினார்.
ஆனால் வந்திக்கு ஒதுக்கப்பட்ட கரையை இறைவன் அடைக்காமல் பிட்டு அருந்தி, ஆடிப்பாடி, ஆழ்ந்த துயில் கொண்டார். அப்போது வைகை ஆற்றை பார்வையிட வந்த பாண்டிய மன்னன் தன் கையிலிருந்த பிரம்பால், படுத்திருந்த இறைவன் முதுகில் அடித்தான். அந்த அடி அனைத்து உலக உயிர்கள் முதுகிலும் பட்டது.
பிட்டுக்கு மண் சுமந்தது இறைவனின் திருவிளையாடல் என்பவதை அரசன் உணர்ந்தான். அப்போது இறைவன் அசரீரியாக தனது திருவிளையாடல் குறித்து கூறினார். ‘மாணிக்கவாசகரின் பெருமையை உணர்த்தவும், வந்திக்கு சிவலோக பதவி தருவதற்காகவும் தாம் இவ்வாறு செய்வதாக’ மன்னனுக்கு உரைத்தார். மன்னனும் மாணிக்கவாசகரை இறைபணிக்கு விடுவித்து, தானும் சிவலோக பதவியை தக்க காலத்தில் அடைந்தான் என்று புராண வரலாறு கூறுகிறது.
திருவிளையாடல் லீலை உற்சவத்தில் நாளை (25 ந் தேதி) விறகு விற்ற லீலை நடக்க உள்ளது. மறுநாள் (26 ந் தேதி) சட்டத்தேர் வீதி உலாவும், இரவு சப்தாவரணத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்வும் நடைபெறும். 27-ந் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.