ஆன்மிகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிகர நிகழ்சியாக தேரோட்டம் வரும் 29-ந் தேதியும் நடைபெற இருக்கிறது.

மதுரை,

உலக புகழ்பெற்ற இந்து கோவில்களில் ஒன்றாக விளங்குவது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலாகும். மிகப் பெரிய சிவலாயங்களில் ஒன்றாகவும், 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், தேவார பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகவும் இக்கோவில் விளங்குகிறது. அம்மனை பிரதான தெய்வமாக வழிபடும் ஒரே சிவன் கோவில் இது தான். பூஜை, அபிஷேகம், வழிபாடு என அனைத்திலும் இங்கு அன்னை மீனாட்சிக்கே முதல் மரியாதை அளிக்கப்படுகிறது.

இப்படி ஏராளமான சிறப்புகள் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மீனாட்சி அம்மன் கோவிலில் வருடந்தோறும் சித்திரை மாதம் கோலாகலமாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. இதைத்தொடர்ந்து வரும் 27-ந் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 28-ந் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், சிகர நிகழ்சியாக தேரோட்டம் வரும் 29-ந் தேதியும் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.